ஏன் விஜய் உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து கரு.பழனியப்பன் கடும் விமர்சனம்
Seithipunal Tamil December 22, 2025 08:48 PM

நடிகர் விஜயின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த கரு.பழனியப்பன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தை சுட்டிக்காட்டி பல கேள்விகளை எழுப்பினார்.

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் நடந்ததாக குறிப்பிட்ட கரு.பழனியப்பன், அந்த இடத்தில் ஒரு மேடை அமைத்து நான்கு நிர்வாகிகளை கூட விஜயுடன் நிற்க வைக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். தனியாக பேருந்தில் நின்று பேசுவது மாற்றம் என்ற பெயரில் செய்யப்படும் அரசியல் நாடகமா என்றும் விமர்சித்தார். மேடையில் நிர்வாகிகள் அருகில் நின்றால் மனிதர்களின் தோள்கள் உரசும்; அதற்காகவே இதைத் தவிர்க்கிறாரா என sarcastic-ஆக கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், விஜய் அரசியலுக்கு நல்லது செய்யவே வந்திருக்கிறார் என்றால் அதனை வரவேற்கிறேன் என்றாலும், இதுவரை எந்த நல்ல மாற்றமும் நடந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். கட்சி தொடங்கிய பிறகு ஒரு முறையான பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை என்றும், கட்சிக்குள்ளேயே சிலர் போராட்டம் நடத்தும் நிலை இருப்பதாகவும் கூறினார்.

பெரியார் குறித்து காகிதம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட விஜய் பேசினால் போதும் என்றும், அதன் பிறகு அவர் சொல்வதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். திராவிட சிந்தனையை விட்டு விலகுபவர்களை காலம் மீண்டும் திராவிட பாதைக்கே கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.

விஜயின் பேச்சுகளில் சொற்ப சொற்களே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்றும், அரசியல் சிந்தனை மற்றும் ஆழம் இல்லை என்றும் கரு.பழனியப்பன் குற்றம்சாட்டினார். இலக்கியவாதிகள் எழுதிக் கொடுத்தால் மட்டுமே விஜய் பேசுவார் என்றும் விமர்சித்தார்.

விஜய்க்கு பெரும் இளைஞர் கூட்டம் திரளுவது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும், அந்த கூட்டம் வீட்டிற்கு என்ன செய்தியை எடுத்துச் செல்கிறது என்பதே முக்கியம் என கூறினார். இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கட்சிக்கு இருப்பதாகவும், சினிமாவைப் போல அரசியலை நினைத்துக் கொண்டு சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பக்கமா அல்லது அரசு பக்கமா என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்றும், யாரையும் சாராமல் மங்கலான கருத்துகளை சொல்லிவிட்டு செல்வதில் எந்த பயனும் இல்லை என்றும் பல கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.