சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 22) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக 720 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1,00,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் என்ற இமாலய இலக்கைத் தொட்டுள்ளது நகை வாங்குவோரை கலக்கமடையச் செய்துள்ளது.
தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து, தற்போது 12,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேசச் சூழல் மற்றும் சந்தை மாற்றங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அதே சமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 231 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது சாமானிய மக்களின் சேமிப்புக் கனவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.