கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்.. இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை!
TV9 Tamil News December 24, 2025 08:48 PM

திருவனந்தபுரம், டிசம்பர் 24 : தமிழகத்தின் (Tamil Nadu) அண்டை மாநிலமான கேரளாவில் (Kerala) உள்ள ஆலப்புழை, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கோழி மற்றும் வாத்து வளர்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழி மற்றும் வாத்துக்கள் அதிக அளவில் இறந்துப்போயுள்ளன. இவ்வாறு ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக வாத்து, கோழிகள் உயிரிழப்பது குறித்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்

கோழி மற்றும் வாத்து மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நெடுமுடி, செருத்தானா, கருவட்டா, அம்பலப்புழா, தகழி ஆகிய பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அதிகப்படியாக கோழிகளும், சில பகுதிகளில் அதிகப்படியாக வாத்துக்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உத்தரகாண்டில் இனி அனைத்து அரசு பள்ளிகளில் பகவத் கீதா கட்டாயம்.. அரசு உத்தரவு!

மொத்தமாக அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசு

இதேபோல கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருபந்தரா, மஞ்சூர், கல்லுபுரக்கல் மற்றும் வேலூர் வார்டுகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பங்குதிகளில் கோழிகள் மற்றும் காடைகளுக்கு அதிக அளவு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பின் தீவிரம் அங்கு அதிகமாக உள்ளதன் காரணமாக உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க கால்நடை பராமரிப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க : கணவனை துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பையில் வைத்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!

முதற்கட்ட நடவடிக்கையாக காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கோழி, காடை, முட்டை மற்றும் வாத்து ஆகிய இறைச்சிகளுக்கான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி மற்றும் வாத்து கடைகளை மொத்தமாக அழிக்கவும் கால்நடை துறை திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு எல்லையில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.