குறும்படங்களில் நடித்த அப்படியே சினிமாவில் நடிக்க வந்தவர்தான் விஜய் சேதுபதி. தொடக்கத்தில் புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய திரைப்படங்கள் விஜய் சேதுபதியை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. வித்தியாசமான கதைகள், அதில் இயல்பான நடிப்பு என கவனம் ஈர்த்தார் விஜய் சேதுபதி. முக்கியமாக ஹீரோ இமேஜுக்குள் சிக்காமல் இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
வழக்கமான நடிகர்கள் போல பந்தா பண்ணுவது, பன்ச் வசனம் பேசுவது, 10 பேரை அடித்து பறக்கவிடுவது என எந்த பில்டப்பும் செய்யாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் விஜய் சேதுபதி. இதனால்தான் அவரை ரசிகர்களுக்கும் பிடித்துப் போனது. மேலும், ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
விஜய் சேதுபதியின் சினிமா கெரியரில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஒரு வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. இப்போது வரை அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குமுதா.. குமுதா என உருகி சென்னை பாஷை பேசும் இளைஞனாக கலக்கியிருந்தார் விஜய் சேதுபதி. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கியிருந்தார்.
இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் முடிந்தபின் கோகுல் சார்கிட்ட சில பேர் விஜய் சேதுபதிக்கு சரியா நடிக்க தெரியல என்று சொல்லி சில காட்சிகளை வெட்டிட்டாங்க. ஆனால் கோகுல் சார் ஏதோ உள் மனசு சொல்லுச்சின்னு ‘இருக்கட்டும்’ என சொல்லி சில காட்சிகளை வெட்டாமல் விட்டுட்டார். அப்பவும் சில காட்சிகள் போயிடுச்சுன்னு எனக்கு வருத்தம் இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.