முடியவே முடியாது..கிளையே இல்லாத கட்சி..காங்கிரஸிடம் ஸ்ட்ரெய்ட்டாக சொன்ன ஸ்டாலின்! விஜய் பக்கம் வண்டியை விடும் காங்கிரஸ்?
Seithipunal Tamil December 24, 2025 11:48 PM

பிரதமர் மோடிக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்னிந்திய மாநிலங்களில் புதிய அரசியல் வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியாகிய தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து, விஜய் தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், தமிழகத்தில் தங்களின் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியும் புதிய கூட்டணிகள் குறித்து பரிசீலித்து வருகிறது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் மேலிடம் விஜயுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்த பேச்சுகளை தென்னிந்திய அரசியல் பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 2026 தேர்தல் குறித்து ஆலோசித்த போது, காங்கிரஸுக்கு சுமார் 70 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளை வழங்க முடியாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு திமுக தலைமையகம் கடும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் கட்சி தனது உள்கட்டமைப்பு பொறுப்புகளை மறுசீரமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தென்னிந்திய அரசியலை பிரியங்கா காந்தி கவனிக்கவும், வட இந்திய அரசியலை ராகுல் காந்தி கவனிக்கவும் பொறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பிறகே விஜய் – காங்கிரஸ் பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் – காங்கிரஸ் கூட்டணி உருவானால், அது தமிழகத்துடன் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கணக்கிடுகிறது. விஜய்க்கு அந்த மாநிலங்களிலும் ரசிகர்கள் இருப்பது தேர்தல் அரசியலில் உதவியாக இருக்கும் என்றும், மேலும் விஜய் தரப்பு அதிக தொகுதிகள் மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளையும் முன்வைப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில தனியார் கருத்துக் கணிப்புகளில் வலுவான மாற்று கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, திமுகவுடன் தொடர்வதை விட தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதே காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவுக்கு பிரியங்கா காந்தி வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.