கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மேல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 75 வயது மூதாட்டியான அவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து,
திமுக ஆர்ப்பாட்டம்
திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்னூர், ஒட்டர்பாளையம் பகுதியில் திமுக சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், மூதாட்டிகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொன்னம்மாளும் அழைத்து வரப்பட்டிருந்தார். அப்போது பொன்னம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பொன்னாம்மாளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் பொன்னம்மாள் உயிரிழந்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பாஜக அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக-வினர் மக்களை மிரட்டி ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.