உலகின் உயரமான ரயில்வே பாலம்… முதல் செங்குத்து பாலம் வரை – உள்கட்டமைப்பில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள்
TV9 Tamil News December 25, 2025 02:48 AM

2025ஆம் ஆண்டு, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை ஏற்படுத்திய ஆண்டாக கருதப்படுகிறது.  ரயில்வே, சாலைகள், விமான போக்குவரத்து, மெட்ரோ, தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் நாட்டின் நீண்டகால வளர்ச்சி கனவுகள் கண்முன்னே நிஜமாக மாறிய ஆண்டாக 2025 திகழ்கிறது. நாட்டின் மிகத் தொலைவான எல்லைப் பகுதிகளிலிருந்து, பெரிய நகர மையங்கள் வரை, இணைப்புகள் வலுப்பெற்றன. வந்தே பாரத், தரமான சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் பயண நேரம் குறைந்தது. வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவை உள்கட்டமைப்பின் மூலமாக எந்த தடையும் இன்றி நேரடியாக பொதுமக்களை சென்றடைந்தன.

மேலும், 2025 – 26 நிதியாண்டில், மத்திய அரசு உள்கட்டமைப்புக்காக ரூ.11.21 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.1 சதவீதமாகும். 2047 வரை ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களிலும் இந்தியா 1 டிரில்லியன் டாலர்  மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்பு தான் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. அதன் பலன், 2025 ஆம் ஆண்டு தெளிவாகக் காணத் தொடங்கியது.

தேசிய ரயில்வே நெட்வொர்க்கில் இணைந்த மிசோரம்

2025ஆம் ஆண்டு, வடகிழக்கு இந்தியாவுக்கே ஒரு வரலாற்றுத் தருணத்தை ஏற்படுத்தியது. மிசோரம் மாநிலம், இந்தியாவின் தேசிய ரயில்வே நெட்வொர்க்குடன் முதல் முறையாக இணைக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் 51 கிலோமீட்டர் நீளமுள்ள பைராபி தொடங்கி சைராங் வரை ரயில் பாதை, ரூ.8,000 கோடி செலவில் அமைக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ரயில் பாதை மூலம், அவசர மருத்துவ சேவைகள், ராணுவ போக்குவரத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் என பொதுமக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 2025 செப்டம்பர் 14 ஆம் தேதி, அசாமிலிருந்து ஐஸ்வாலுக்கு முதல் சரக்கு ரயில் இயக்கமும் தொடங்கியது. இதன் மூலம் மூங்கில், தோட்டக்கலை பொருட்கள் போன்றவற்றை நாட்டின் பல பகுதிகளுக்கு எளிதில் கொண்டு செல்லப்படுகின்றன.

உலகின் உயரமான ரயில்வே பாலம்

இந்தியாவின் பொறியியல் திறன், 2025 ஆம் ஆண்டு உலகமே வியக்கும் அளவுக்கு இருந்தது. உதம்பூர் – ஸ்ரீநகர் – பராமுல்லா ரயில் திட்டத்தின் கீழ், உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டது. அப்பகுதி மக்களின் பல ஆண்டுகள் கனவை நினைவாக்கும் விதமாக அமைந்தது.

இந்தியாவின் முதல் செங்குத்து கடற்பாலம்

2025 ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் செங்குத்து கடற்பாலமாகும். தொழில்நுட்ப ரீதியாக, அமெரிக்காவின் கோல்டன் கேட் பாலம், லண்டனின் டவர் பிரிட்ஜ், டென்மார்க் – ஸ்வீடனை இணைக்கும் ஓரசுண்ட் பாலம் போன்ற உலகப் புகழ்பெற்ற பாலங்களுடன் ஒப்பிடப்படும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கண்டெய்னர் டிரான்ஷிப்மெண்ட் துறைமுகம்

கேரளாவில் ரூ.8,900 கோடி மதிப்பில் விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் தனிப்பட்ட கண்டெய்னர் டிரான்ஷிப்மெண்ட் துறைமுகமாகும். இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தை உலக அளவில் வலுப்படுத்தும் முக்கிய கட்டமைப்பாக இது விளங்குகிறது.

பீகாரில் முதல் வந்தே மெட்ரோ

பீகாரில் ஜெயநகர் முதல் பட்னா இடையே மாநிலத்தின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. முழுமையாக குளிரூட்டப்பட்ட, முன்பதிவு இல்லாத இந்த ரயில், 8 மணி நேரம் பயணத்தை 5.5 மணி நேரமாக குறைத்துள்ளது.இது ரயில் சேவையை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ளது.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு முதல் நேரடி ரயில் சேவை

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு முதல் முறையாக நேரடி ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது காஷ்மீர் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி – மீரட் ரயில் திட்டம்

82.15 கிலோமீட்டர் நீளமுள்ள டெல்லி – மீரட் ரயில் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. 180 கிமீ வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் இந்தியாவின் புதிய பயண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நவி மும்பை சர்வதேச விமான நிலையம்

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டடம் திறக்கப்பட்டதன் மூலம், நாட்டின் விமான போக்குவரத்து மேலும் உயர்ந்துள்ளது. மும்பையின் தற்போதைய விமான நிலையத்தின் அழுத்தம் வெகுவாக குறைக்கப்பட்டு, மேலும் ஒரு பயண வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடற்படை உள்கட்டமைப்பில் சாதனை

2025 ஆகஸ்டில், 75 சதவீதத்துக்கும் மேல் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி என்ற இரண்டு ஸ்டெல்த் ஃபிரிகேட்கள் ஒரே நேரத்தில் சேவையில் இணைக்கப்பட்டன. இது இந்திய கடற்படை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும்.

பெங்களூரில் எல்லோ லைன் மெட்ரோ

பெங்களூரின் மையப் பகுதியை எலக்ட்ரானிக்ஸ் சிட்டியுடன் இணைக்கும் எல்லோ லைன் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இது நகர போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைத்துள்ளது.

முதன்முறையாக மின் இணைப்பு பெற்ற கிராமங்கள்

2025 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் அமைப்பால் பாதிக்கப்பட்ட 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது மகாராஷ்டிராவின் காட்ஜிரோலியில் உள்ள கட்டேஜ்ஹரி கிராமத்திற்கு முதன்முறையாக பேருந்து சேவை வழங்கப்பட்டது. பிஜாப்பூர் மாவட்டத்தின் கொண்டபள்ளி கிராமத்தில் முதல் முறையாக மொபைல் டவர் நிறுவப்பட்டது.

விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்வு

2025ல் இந்தியாவில் விமான நிலையங்கள் எண்ணிக்கை 74ல் இருந்து 163 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக மாறியுள்ளது. ரயில்வே நெட்வொர்க்கில் 99 சதவீதம் மின்மயமாக்கல் நிறைவு பெற்றுள்ளது. மெட்ரோ சேவை 248 கிலோமீட்டரிலிருந்து 1,013 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 1.46 லட்சம் கிலோமீட்டரை கடந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.