திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவருக்குத் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 24, 2025) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 12-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று மாந்தோப்பில் வைத்துச் சிதைத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தனிப்படை அமைத்துத் தேடப்பட்டு வந்த அந்த நபர், சுமார் 14 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்துப் போலீஸாரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ராஜு பிஸ்வகர்மாவுக்குச் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்ததோடு, ரூ.1.45 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
குற்றம் நடந்த 5 மாதங்களுக்குள்ளேயே வழக்கின் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தந்த திருவள்ளூர் போலீஸாருக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “குழந்தைகள் மீதான அத்துமீறல்களுக்குப் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்” என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.