விஜயின் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 14ம் தேதி வெளியாவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சில காரணங்களுக்காக பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பராசக்தி பட தயாரிப்பாளர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் மற்றும் உறவினர் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கக் கூடாது என்பதனாலேயே வேண்டுமென்று இப்படி செய்திருக்கிறார்கள் என சிலர் பேச துவங்கினார்கள். ஈரோட்டில் விஜய் பேசிய பேச்சே இதற்கு காரணம் எனவும் சொல்லப்பட்டது. ஒருபக்கம், இதற்கு பின்னணியில் சிவகார்த்திகேயன் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.
ஜனநாயகன் ரிலீஸுக்கு அடுத்த நாளே பராசக்தி ரிலீஸ் ஆவதால் 4 காட்சிகளில் இரண்டு காட்சிகள் ஜனநாயகன் ஓடட்டும், இரண்டு காட்சிகள் பராசக்திக்கு கொடுத்து விடுங்கள் என்ன ரெட் ஜெயண்ட் தரப்பில் பல தியேட்டர்களிடம் சொல்லப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தது.
இதில் என்ன பிரச்சனை எனில் ஜனநாயகன் ஒரு வாரத்தில் செய்ய வேண்டிய வசூலை செய்வதற்கு இரண்டு வாரங்கள் ஆகும். மேலும், ஜனநாயகன் படம் ஓடும் தியேட்டர்களும், காட்சிகளும் குறையும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இது விஜய் ரசிகர்களை கடுமையாக கோபப்படுத்தி இருக்கிறது. பொதுவாக விஜய் ரசிகர்கள் விஜய் படம் வெளியாகும் போது அந்த படத்தோடு வேறு ஒரு பெரிய நடிகர் படம் வெளியானாலும் கோபப்படுவார்கள். அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள். வன்மத்தை கக்குவார்கள். சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது.
தற்போது இந்த பிரச்சனையை பராசக்தி படமும் சந்திக்க துவங்கியிருக்கிறது கடந்த இரண்டு நாட்களாகவே விஜய் ரசிகர்களும் திமுகவை பிடிக்காதவர்களும் பராசக்தி படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். விஜயின் கடைசி படத்தின் வசூலை குறைப்பதற்காகவே வேண்டுமென்று இதை செய்கிறார்கள் என அவர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஒருபக்கம், முன்பெல்லாம் பல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி தியேட்டர்களை பங்கு போட்டுக் கொண்டு வசூலை அள்ளியிருக்கிறது. எனவே இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை எனவும் சிலர் பேசுகிறார்கள். மொத்தத்தில் விஜய் படத்தோடு மோதி சிவகார்த்திகேயன் விஜய் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்பதே உண்மை.