கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய்க்கு முதல் ஆதரவு அழைப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து வந்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், கரூர் சம்பவத்தில் விஜய்மீது கொலைப்பழி சுமத்த முயற்சி நடந்ததாகவும், ஆனால் ராகுல் காந்தி நேரடியாக போன் செய்து “I am always with you, don’t worry” என ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார். இதன் காரணமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் பயந்துவிட்டார் என்றும் அவர் விமர்சித்தார்.
டெல்லி முதல் பல தேசிய தலைவர்கள் வரை விஜய்க்கு ஆதரவாக பேசினர் என்றும், தமிழகத்தின் எதிர்கால அரசியல் தலைவராக விஜய்யை தேசிய கட்சிகள் கூட உணர்ந்துவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தை பார்த்த அனுபவம் கொண்ட செங்கோட்டையன், விஜய்யை எதிர்கால தலைவராகக் கருதி தவெகவில் இணைந்துள்ளார் என்றும், இதுவே விஜய்யின் அரசியல் வலிமைக்கு சான்று என்றும் அவர் தெரிவித்தார். பணத்தால் அல்ல, மக்களின் அன்பாலும் நம்பிக்கையாலும் தான் அரசியல் மாற்றம் உருவாகும் என்றும், திமுக, அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் தவெக பக்கம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், திமுக சமூகநீதியை பேசினாலும் 2024 மக்களவைத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றும், குடும்ப அரசியலே அவர்களின் இலக்கு என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். தவெக எக்காரணம் கொண்டும் மதபெரும்பான்மை வாத சக்திகளுடன் இணையாது என்றும், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் ஒரே அரசியல் எதிரி திமுகதான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். முன்னதாக கன்னியாகுமரி வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.