லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாத மேடையில் (Oxford Union), மும்பையைச் சேர்ந்த சட்ட மாணவர் வீரான்ஷ் பானுஷாலி (Viraansh Bhanushali), பாகிஸ்தானின் பயங்கரவாதப் போக்கைக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை வெறும் அரசியல் நாடகம்” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அவர், இந்தியா எடுக்கும் முடிவுகள் ஓட்டுக்காக அல்ல, நாட்டின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படுபவை என்று ஆணித்தரமாக வாதிட்டார்.
“வெட்கமில்லாத ஒரு நாட்டை (பாகிஸ்தானை) உங்களால் ஒருபோதும் வெட்கப்பட வைக்க முடியாது; பாகிஸ்தானியர்களின் திறமையின்மையை இந்தியர்களால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும்” என அவர் பேசிய அதிரடி வசனங்கள் தற்போது இணையத்தில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகின்றன.
விவாதத்தின் போது பாகிஸ்தான் மாணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வீரான்ஷ், 26/11 மும்பை தாக்குதல், பதான்கோட், உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.
ஒரு மும்பைக்காரனாகப் பயங்கரவாதத்தின் வலியைத் தான் உணர்வதாகவும், பயங்கரவாதத்தை வளர்க்கும் ஒரு நாடு அறநெறி பற்றிப் பேசத் தகுதியற்றது என்றும் சாடினார்.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தேர்தலை நோக்கியவை அல்ல, அவை நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கானவை என்பதைத் தரவுகளுடன் விளக்கிய அவரது பேச்சுக்குத் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடமிருந்து பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.