தவெக கூட்டணியில் எத்தனை சீட்?!.. ஓபிஎஸ் எடுத்த முடிவு!.. அரசியல் பரபர...
WEBDUNIA TAMIL December 25, 2025 05:48 AM


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெ.வின் தயவால் இரண்டு முறை முதல்வராகவும் இருந்தார். ஜெ.வின் மறைவுக்கு பின்னும் சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார் ஓபிஎஸ். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு சசிகலா தரப்பு அவரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு பரபரப்பு பேட்டி கொடுத்தார் ஓபிஎஸ்.

அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மாறியதும் ஓபிஎஸ் துணைமுதல்வராக இருந்தார். ஆனால் அவருக்கும் பழனிச்சாமிக்கு இடையே சில விஷயங்கள் ஒத்துப்போகாததால் பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து தூக்கினார் பழனிச்சாமி. கடந்த சில வருடங்களாகவே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரோடு அவர் இணக்கம் காட்டி வருகிறார்.

ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுகவில் இணைய போவதில்லை என்றும் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதில், 90 சதவீதம் பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவும், 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்,

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.