சேலம்: 220 அடி நீளத்தில் 'தீண்டாமைச் சுவர்' எழுப்பியுள்ளதாக பட்டியல் சமூகத்தினர் குற்றச்சாட்டு
BBC Tamil December 25, 2025 03:48 AM
BBC

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ளது ஓலைப்பட்டி. இந்த ஊரில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில், இரண்டு அடி அகலம், பத்தடி உயரம், 220 அடி நீளத்தில் ஒரு பிரமாண்டமான கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இது தீண்டாமைச் சுவர் என்று ஒரு தரப்பாரும், இல்லை மாட்டுப் பண்ணை அமைக்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சுவர் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். கள நிலவரத்தை அறிய பிபிசி தமிழ், ஓலைப்பட்டிக்கு நேரில் சென்றது.

ஆயிரம் வீடுகளைக் கொண்ட ஓலைப்பட்டியில் பட்டியல் சமூக மக்கள் நூறு குடும்பத்திற்கும் குறைவாகவே உள்ளனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஊரின் கிழக்குப் பக்கம் 1.98 ஏக்கர் நிலத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வீடுகள் கட்ட மாநில அரசு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. மூன்று தெருக்களைக் கொண்ட இந்த இடத்தில், நாற்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புக்குப் பின்பக்கம் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலமும், வலது பக்கம் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலமும் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வலதுபக்க நிலத்தை விலைக்கு வாங்கிய பழனிசாமி, அந்த இடத்தில் மாட்டுப் பண்ணை அமைக்கப் போவதாகக் கூறி, பட்டியல் சமூக மக்கள் குடியிருப்புக்கும், தனது நிலத்திற்கும் இடையே ஒரு பிரமாண்டமான சுவரை எழுப்பியுள்ளார்.

'காற்று வருவதற்கு வழிவிடுங்கள்'

ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை பணியாளர் தனம் இதுகுறித்துப் பேசும்போது, "இவ்வளவு பெரிய சுவர் வைக்க வேண்டாம். எங்கள் பகுதியிலுள்ள வீடுகளுக்குக் காற்றுகூட வராது. வழக்கமான சுற்றுச் சுவர்கள் உள்ளது போல் 5 அல்லது 6 அடி உயரத்திற்குச் சுவர் வைத்து, அதற்கு மேலே கம்பி வலை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

ஆனால், வாஸ்துபடி பத்தடி உயரத்திற்குச் சுவர் வைக்க வேண்டுமென்று கூறி எழுப்பிவிட்டனர். நிலத்தின் இரு பக்கமும் கம்பி வேலி போட்டுள்ள பழனிசாமி, பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதிக்கு மட்டும் சுவர் வைத்து தடுத்துள்ளார். இதை எங்களை இழிவு படுத்தும் செயலாகத்தான் பார்க்கிறோம்," என்று தெரிவித்தார்.

BBC ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை பணியாளர் தனம் 'விவசாய நிலத்தில் குப்பை போடுகின்றனர்'

பிரமாண்டமான சுவரை எழுப்பியுள்ள நிலத்தின் உரிமையாளர் பழனிசாமியிடம் சுவர் எழுப்பியதன் காரணத்தை அறிந்துகொள்ளப் பேசினோம்.

அப்போது அவர், "என் இரண்டு மகன்களுக்கும் ஏதாவது தொழில் ஆரம்பித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில், இந்த நிலத்தை விலைக்கு வாங்கி, விவசாயம் செய்து வந்தேன். அங்குள்ள குடியிருப்புப் பகுதி மக்கள் நாப்கின், வீட்டுக் குப்பைகள், காலி பாட்டில்கள் என அனைத்துக் குப்பைகளையும் விவசாய நிலத்தில் போட்டு விடுகின்றனர். அறுவடை நேரத்தில், அந்தக் குப்பைகளைச் சுத்தம் செய்வது பெரும்பாடாக இருக்கிறது.

மாட்டுப் பண்ணை அமைத்து, கால்நடைகளுக்குத் தீவனம் அரைக்கும் இயந்திரமும் போடலாம் என்று வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். தீவனம் அரைக்கும்போது தவிடு, தூசுகள் குடியிருப்புப் பகுதிக்குள் போகக்கூடாது, அந்தப் பக்கம் இருந்து குப்பைகளும் இங்கு வரக்கூடாது. இந்த அடிப்படையில்தான் உயரமான சுவராகக் கட்டியுள்ளோம். மற்றபடி, இதில் சாதிய உள்நோக்கம் எதுவும் இல்லை" என்றார்.

மேலும், "வேலையைத் தொடங்கும்போதே, செல்வன் என்ற தம்பி, நான்கைந்து பேரை அழைத்து வந்து பிரச்னையை எழுப்பினார். முதலமைச்சர், அமைச்சர் எனப் பலருக்கும் புகார் அனுப்பியுள்ளார். காவல் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்து, ஆய்வு செய்து பார்த்தனர்.

அதன் பிறகு, அவர்களும் உங்கள் நிலத்தில் சுவர் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இதுபோன்ற இடையூறுகளால், ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு வருடம் இழுத்துவிட்டது. இப்போது, ஆய்வுக்கு வந்த வங்கி அதிகாரிகள், பிரச்னை உள்ள இடத்தில் மாட்டுப் பண்ணை அமைக்க கடன் கொடுக்க மாட்டோம் என்கின்றனர்" என்றும் பழனிசாமி கூறினார்.

BBC நிலத்தின் உரிமையாளர் பழனிசாமி

இதுகுறித்துப் பேசிய செல்வம், "எங்கள் ஊரிலுள்ள மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. கொஞ்சம் படித்த இளைஞர்கள் எல்லோரும் வெளியூருக்கு வேலைக்குச் சென்று விட்டனர். பத்தடி உயரத்தில் சுவர் வைக்கப் போவதாகச் சொன்னபோதே, இந்தச் சுவர் எங்கள் மக்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் உள்ளதாகக் கூறினேன்" என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சுவர் இடிந்து விழுந்தாலும், எங்கள் பகுதி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சத்தை வெளிப்படுத்திய அவர், நான்கு அடி உயரத்தோடு சுவரை நிறுத்திவிட்டு, மேலே கம்பி வலை போடச் சொல்லுங்கள் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

"மானந்தாள் ஏரியைப் பார்வையிட வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் இராஜேந்திரனின் காரை, அந்த இடத்திலேயே மறித்து நிறுத்தி, இந்த தீண்டாமைச் சுவரைக் காட்டினேன். அப்போது ஆறு அடி உயரத்திற்கு சுவர் வைத்திருந்தனர். அமைச்சர் இதற்கு மேல் கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனாலும், அதிகாரிகள், மேற்கொண்டு சுவரை உயரமாக எழுப்புவதற்கு அனுமதித்துவிட்டனர்" என்கிறார் செல்வம்.

இந்திய குடியரசுக் கட்சியின் மாநில செயல் தலைவர் வாத்தியார் (எ) அம்பேத்கர், "மதில் சுவர் என்பதே பிரிவினையின் அடையாளம்தான். குடியிருப்புப் பகுதியை ஒட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அமையுமானால், அந்த இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக உயரமான சுவர்களை எழுப்பலாம். இது விவசாய நிலம்.

அதோடு மற்ற இரு பக்கமும் கம்பி வேலி அமைத்துள்ளனர். ஒரு பக்கம் எந்தவிதமான தடுப்பும் இல்லாமல் இருக்கிறது. பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதிக்கு மட்டும் சுவர் எழுப்பியுள்ளனர். எனவே அது தீண்டாமைச் சுவர்தான்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாவட்ட நிர்வாகம் இதைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இந்த தீண்டாமைச் சுவர் குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரேகா பிரியதர்ஷினி, அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் இந்த இடத்தை வந்து பார்க்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில், பட்டியல் சமூக நலக் குழு கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பல இடங்களில் நடக்கும் தீண்டாமை பிரச்னைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு போக முடியவில்லை. தீண்டாமை சுவர் குறித்த எனது புகாருக்கு 30 நாட்களுக்குள் நடவடிக்கை இல்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறேன்" என்றார்.

BBC இந்திய குடியரசுக் கட்சியின் மாநில செயல் தலைவர் வாத்தியார் (எ) அம்பேத்கர்

இதுகுறித்துப் பேசிய ஓமலூர் வட்டாட்சியர் ரவிக்குமார், "ஓலைப்பட்டி கிராமத்தில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டு வருவதாக புகார் வந்தது. காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தினோம். பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் பாதைக்கோ, அவர்களின் பயன்பாட்டு இடத்துக்கு இடையூறாகவோ இந்தச் சுவர் அமையவில்லை" என்று குறிப்பிட்டார்.

மேலும், "தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தச் சுவர் கட்டப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிலுள்ள பாதையை ஒட்டி ஒரு மீட்டர் அளவுக்கு இடத்தை விட்டுவிட்டுதான் அந்த சுவரைக் கட்டியுள்ளார்.

தனியார் நிலத்தில் கட்டப்படும் சுவரைத் தடுப்பதற்கு எனக்கு அதிகாரமில்லை. இது தீண்டாமைச் சுவர் என்ற கணக்கில் வராது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுமாறு தெரிவித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

'ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே பார்க்கப்படுவர்'

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் தினகரன், "சுவர் வைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் சுவர் வைக்க வேண்டாம் என்று பட்டியல் சமூக மக்கள் கூறவில்லை. ஐந்து அடி உயரம் வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுள்ளனர். பத்து அடி உயரத்தில், சுவர் எழுப்பியதுதான் தீண்டாமை பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மாவட்ட அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, தனியார் நிலத்தில் குப்பைகளைப் போடக்கூடாது, தேவையின்றி அதிக உயரத்தில் சுவர் எழுப்பக்கூடாது என சுமூகமாக முடித்திருக்கலாம் என்றும் கூறுகிறார் வழக்கறிஞர் தினகரன்.

"அப்படிச் செய்திருந்தால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இப்போதுள்ள சூழ்நிலையில், அந்தச் சுவருக்கு அருகே வாழும் மக்கள் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற மனநிலையிலேயே வாழ்வார்கள், வெளியுலக மக்களும் அப்படித்தான் பார்ப்பார்கள்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.