தமிழ்நாடு அரசு போராடுபவர்களிடம் கூட மரியாதை மற்றும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “பெண்கள் அரசியலில் முன்னிலையில் நிற்க அடல் பிகாரி வாஜ்பாயின் ஊக்கம் ஒரு காரணம். நான் மருத்துவக்கல்லூரி இருக்கும் பொழுது அடல் பிகாரி வாஜ்பாயின் பேச்சுகளில் ஊக்கம் அடைந்து தான் பாஜகவில் சேர முடிவெடுத்தேன். அமெரிக்கா வளர்ந்த நாடாக ஆனதற்கு பின்பு சாலைகள் அமைக்கப்படவில்லை, நல்ல சாலைகள் அமைக்கப்பட்டதால் தான் வளர்ந்த நாடாகியது என்று அவர் சொன்ன வார்த்தைகள் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.
பாஜகவை பொருத்தவரை ஒரு வளர்ச்சியிலிருந்து ஆட்சியை ஒரு கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நடத்தியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அடல் பிகாரி வாஜ்பாய் தான் வளர்ச்சியநாயகன் அவர்களுக்கு பிறகு பிரதமர் மோடி அவர்கள் வளர்ச்சியை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் நதிகளை எனக்கு வேண்டும் என்று நினைத்தார். ஒரு தொலைநோக்கு பார்வையில் பாஜக பயணித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. செவிலியர்கள் தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பெண்ணுடைய காணொளி என்னை மனதை மிகவும் தொந்தரவு படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் உள்ளாடை கூட அணிய விடாமல் பிடித்து இழுத்து செல்வதாக ஒரு செவிலியர் கூறி இருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு அரசு போராடுபவர்களிடம் கூட மரியாதை மற்றும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என பெண்களின் ஒரு பிரதிநிதியாக நானும் வானதியும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
பாரதியார் பிறந்தநாள் விழாவில் ஆர்எஸ்எஸ் - ன் சேவைகளால் தான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன் என கூறிய தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு கமலாலயத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அவருடைய உரையை நேரில் கண்டு வியந்து உடனடியாக பாரதிய ஜனதாவில் சேர வேண்டும் என முடிவெடுத்தேன் என பேசி உள்ளார்.*