முடிவுக்கு வந்த செவிலியர் போராட்டம் - அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
BBC Tamil December 25, 2025 04:48 AM
BBC

தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் ஆறு நாட்களைக் கடந்த நிலையிலும் தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமெடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம். செவ்வாய்க்கிழமையன்று நண்பகலில் அந்த இடம் முழுவதையும் காவல்துறை சுற்றி வளைத்திருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைவிட, அங்கிருக்கும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள் செவிலியர்கள். அவர்கள், பெரிய ஊடக கவனமின்றி ஆறாவது நாளாகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

இந்தத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களின் கோரிக்கை என்ன?

"மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தைப் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை" என்கிறார் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா.

இந்தப் பிரச்னையின் பின்னணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தமிழ்நாட்டில் 2014-15 காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தற்காலிக செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, தற்காலிக செவிலியர்கள் மருத்துவப் பணியார்கள் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களது பிரதான கோரிக்கை.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது" என்றார் எஸ்.கே. சுஜாதா.

தி.மு.கவின் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 356இல் 'அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், "இப்போது ஆட்சியே முடிவடையும் தருவாய் நெருங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையிலேனும், 2021இல் அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இதை வலியுறுத்தி கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் எஸ்.கே. சுஜாதா.

BBC தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா

கடந்த 2014 - 15இல் செவிலியர்கள் தற்காலிகப் பணியில் சேர்க்கப்படும்போது அவர்களுக்கு தொகுப்பூதியமாக 7,000 ரூபாயே வழங்கப்பட்டு வந்தது. அது, பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

"விலைவாசி இவ்வளவு உயர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் வெறும் 18,000 ரூபாயை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நே. சுபின்.

மேலும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் நிலையில், தற்காலிக செவிலியர்களுக்கு அந்தச் சலுகை அளிக்கப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அருகில் டிசம்பர் 18ஆம் தேதி பட்டினிப் போராட்டத்தை நடத்த செவிலியர் சங்கம் முடிவு செய்தது. அந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.

அன்று பிற்பகலில் மருத்துவத் துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தொடர்வதாக செவிலியர் சங்கம் அறிவித்தது. இந்தச் சூழலில்தான், டிசம்பர் 18ஆம் தேதி இரவில் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அனைவரும் காவல் துறையால் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

"அழைத்து வரும்போதே பேருந்துகளின் கதவுகளையெல்லாம் அடைத்து, மிக மோசமாக அழைத்து வந்தார்கள். இதற்குப் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை போராட்டம் நடத்தினோம்.

நான்கு மணியளவில் மீண்டும் எங்களைப் பேருந்தில் ஏற்றி, ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தார்கள். அடுத்த நாள் அமைச்சர் தரப்பிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. அப்போதும் நிர்வாகிகளிடம் அலட்சியமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது" என்கிறார் எஸ்.கே. சுஜாதா.

மேலும் பேசிய அவர், "பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அங்காங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபங்களிலேயே போராட்டத்தைத் தொடர்ந்தோம். அன்று மாலைக்கு மேல், போராட்டத்தை முடித்துக்கொண்டு புறப்படுங்கள் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

பிறகு, அன்றிரவே (டிசம்பர் 19) மண்டபங்களில் இருந்து எங்களை வெளியேற்றிவிட்டு, மண்டபங்களைப் பூட்டிவிட்டனர். அதற்குப் பிறகு என்ன செய்வதெனத் தெரியாமல் இந்த நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டம் நடத்த ஆரம்பித்தோம். திங்கட்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆகவே தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம்," என்கிறார் எஸ்.கே. சுஜாதா.

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கியிருந்த செவிலியர்கள் காலையில், அருகிலுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தச் சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் குற்றம் சாட்டினர்.

BBC

இதற்கிடையில் திங்கட்கிழமையன்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் சில கட்டடங்களைத் திறந்து வைத்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இது தொடர்பாக சில விளக்கங்களை அளித்தார்.

"இதுவரை 7,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்ட நிலையில், தற்போது 8,322 செவிலியர்கள் தங்கள் பணியிடங்களையும் நிரந்தரமாக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவிட் பேரிடர் காலத்தில் இவர்கள் பெரிய அளவில் பொதுமக்களின் உயிர் காத்ததால், அவர்களுக்கு 14,000 ரூபாயாக இருந்த சம்பளம் 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும் காலிப் பணியிடங்கள் அவ்வபோது உருவாகும்போது அதில் ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

ஆண்டுதோறும் காலியாகின்ற செவிலியர் பணியிடங்கள் தவிர்த்து புதிதாகக் கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு என 1,200 புதிய செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அந்தப் பணியிடங்களையும் சேர்த்துதான் இந்த 3,614 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

மேலும், "இப்போது வரை காலியாக இருக்கின்ற 169 பணியிடங்களுக்கு உடனடியாகப் பணிநிரந்தர ஆணைகளைத் தயார் செய்யும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்தார்.

இது தவிர, செவிலியர்களுக்கு இரண்டாம் நிலை கண்காணிப்பாளர் பதவி உயர்வை வழங்கும்போது மேலும் 266 பணியிடங்களும் இரண்டாம் நிலை போதகர் பதவி உயர்வு வழங்குவதன் மூலம் 140 பணியிடங்களும் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வேறு சில இடங்களிலும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மொத்தமாக 723 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதாவது, காலிப் பணியிடங்கள் ஏற்பட, ஏற்பட அந்தப் பணியிடங்களில் தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதும் இப்போது தற்காலிக செவிலியர்களாக உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்பதும் அரசின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், செவிலியர்களைப் பொறுத்தவரை, "இத்தனை தற்காலிக செவிலியர்கள் பணிபுரிய வேண்டிய நிலை இருந்தும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பணிச் சுமை அதிகமாக இருக்கிறது. ஆகவே எங்களை தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திராமல், ஏன் பணி நிரந்தரம் செய்யக்கூடாது" என்கிறார்கள்.

"சுமார் 8,000 செவிலியர்கள் வெறும் 18,000 ரூபாய் சம்பளத்துடன் பணிபுரிகிறார்கள். இவர்கள் எல்லோருமே மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வானவர்கள். நிரந்தரப் பணியில் உள்ள செவிலியர்களைப் போலவேதான் இவர்களும் பணியாற்றுகிறார்கள்.

சில நேரங்களில் இவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இவர்களை இதே நிலையில் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?" எனக் கேள்வி எழுப்புகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

கடந்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பெரிய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 60 சதவிகிதமும் இதயநோய் வந்தவர்களுக்கு 'கேத் லேப்'பில் அளிக்கப்படும் சிகிச்சையின் அளவு 100 சதவிகிதமும் அதிகரித்து இருப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

"தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசு கூறுகிறது. அப்படியிருக்கும்போது மருத்துவப் பணியாளர்களின் பணியிடங்களும் அதிகரிப்பதுதானே சரியாக இருக்கும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.

அதாவது, "8,000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக இருக்கிறார்கள் என்றால், 8,000 நிரந்தர செவிலியர்கள் தேவை என்றுதானே அர்த்தம். 15 - 20 வருடங்களுக்கு முந்தைய நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து அந்த அளவுக்கே பணியிடங்களை வைத்திருப்பது எப்படிச் சரியாக இருக்கும்?" என்றும் வினவுகிறார் மருத்துவர் சாந்தி.

இந்திய பொது சுகாதார தரப்படுத்தல் நெறிமுறைகள், "பொது வார்டுகளில் 6 படுக்கைகளுக்கு ஒருவரும், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஒரு படுக்கைக்கு ஒருவரும், பிரசவ வார்டுகளில் இரண்டு படுக்கைகளுக்கு ஒருவரும் நான்கு சிசுக்களுக்கு ஒருவரும் என செவிலியர்கள் இருக்க வேண்டும்" என்று வரைமுறைப்படுத்தி இருப்பதை சுட்டிக்காட்டிய சாந்தி ரவீந்திரநாத், "அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் செவிலியர்கள் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் இருக்கிறதா? அப்படியில்லாத நிலையில், இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதுதானே சரியானதாக இருக்கும்?" என்றார்.

Ma. Subramanian/X மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. "ஏற்கெனவே அமைச்சர் அளித்த அறிக்கைகளில் உள்ள தகவல்களையே போட்டுக் கொள்ளுங்கள்" என்று மட்டும் அமைச்சர் தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில், நந்திவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர் கொடுத்த உத்திரவாதம்

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, டிசம்பர் 24 அன்று மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி வாயிலாக செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாக செவிலியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவுகள் தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் உத்தரவாதம் அளித்து இருப்பதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அந்த அறிக்கைப்படி, "நிரந்தரப் பணி முதல்கட்டமாக ஆயிரம் பேருக்கு வழங்குதல், மகப்பேறுக்கான ஊதியம் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 24/10/25 முதல் ஊதியத்துடன் வழங்குதல், நிலுவையிலுள்ள ஊதிய உயர்வு 14000இல் இருந்து 18 ஆயிரமாக நிலுவையுடன் வழங்கப்படும், ஒப்பந்த செவிலியர் கலந்தாய்வு விண்ணப்ப தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. மீதமுள்ள தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தரப் பணியிடங்களை உருவாக்கி படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படும் ஆகியவை உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளுக்கு அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார்."

மேலும், போராட்ட காலத்தில் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது, நடவடிக்கை எடுக்கப்படாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.