நடிகராக மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த மனிதராகவும் மக்களை கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். மிகவும் எளிமையான குணம் கொண்டவர். யாரிடம் பழகினாலும் உண்மையாகவே பழகுவார். உண்மையாக பேசுவார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இரக்க குணம் கொண்டவர்.. பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.. மற்றவர் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஒருவர் என விஜயகாந்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதனால்தான் அவர் மறைந்த பின்னரும் அவரின் புகழ் மக்களிடம் ஓங்கி நிற்கிறது. இப்போதும் அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயகாந்த் போல ஒருவரை இனிமேல் பார்க்க முடியாது என்பதுதான் திரையுலகில் உள்ளவர்களின் கருத்தாக மட்டுமில்லாமல் மக்களின் கருத்தாகவும் இருக்கிறது.
அரசியலில் வேகமாக விஜயகாந்த் வளர்ந்து கொண்டிருந்தபோது அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன்பின் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாமலும், நடக்க முடியாமலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாதவராகவும் அவர் அவதிப்பட்டார்.
இந்நிலையில்தான் கொம்புசீவி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்த் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார்.
ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என எல்லோரும் அப்பாவை பற்றி அவதூறாக பேசிய போது கூட அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் துரோகம் செய்த போதும், நண்பர்களாக இருந்தவர்கள் கூட அவரை விட்டுப் போனப்போதும் அவரால் தாங்க முடியவில்லை.
அதுதான் அவரின் மனதை அதிகமாக பாதித்தது. அதுவே கூட அவருக்கு நோயாக மாறியிருக்கலாம். அதை அவர் வெளியே சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் அந்த வலி அவரிடம் இருந்தது’ என்று சொல்லி இருக்கிறார்.