2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி, தேர்தலுக்கான 75 சதவிகித வேலைகளை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜ.க கூடுதல் தொகுதிகள் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, கொங்கு மண்டலமான சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க-விற்கும் சாதகமான பகுதி என்பதால், அ.தி.மு.க-வினர் இந்தப் பகுதிகளில் போட்டியிட அதிக அளவில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில், மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் சங்ககிரி, ஏற்காடு (தனி), சேலம் மாநகரில் ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் திருச்செங்கோடு, ராசிபுரம் (தனி) உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க சீட் கேட்டு வருவதாகவும், திருச்செங்கோட்டில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ராசிபுரம் (தனி) பா.ஜ.க மாநில துணைத்தலைவராக உள்ள வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ADMK - BJP
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வை பொறுத்தவரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி இந்தமுறை மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இதே போன்று, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் சீட் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜ.க குறிப்பிட்டு இந்த இரண்டு தொகுதிகளையும் கேட்பதால், அங்கு செல்வாக்கு மிக்கவர்களாக வளம்வரும் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை பேசி சரி செய்து விடுவார், கொங்கு மண்டலத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் கூறி வந்தாலும், தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சியினர் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.