தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நேரடி சவால் விடும் வகையில், அரசு பேருந்துகளின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் பெரும் முயற்சியில் தமிழக அரசு களமிறங்கியுள்ளது.
2025–2026 நிதியாண்டிற்காக, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் 130 அதிநவீன பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்துள்ளது.இதில், 110 பேருந்துகள் குளிர்சாதன வசதியில்லாத செமி ஸ்லீப்பர் மற்றும் சீட்டிங் வசதியுடன் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 20 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளாக தயாரிக்கப்பட்டுள்ளன.பெங்களூரில் கட்டமைப்பு பணிகள் முழுமை பெற்ற நிலையில், இந்த 20 அதிநவீன வால்வோ ஏ.சி. பேருந்துகள் சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து, இந்த சொகுசு பேருந்துகளின் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த வால்வோ மல்டி ஆக்சில் ஏ.சி. பேருந்துகள் சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.நீல நிறத்தில் கண்ணைக் கவரும் தோற்றத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பேருந்துகள், 15 மீட்டர் நீளமும், ரூ.1.75 கோடி மதிப்பும் கொண்டவை.
முன்புறம் மற்றும் பின்புறம் டிஜிட்டல் வழித்தட பலகைகள், 2×2 சீட்டிங் அமைப்புடன் 51 வசதியான இருக்கைகள் இதில் உள்ளன.பெரிய கண்ணாடி ஜன்னல்கள், மொபைல் சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு சென்சார்கள், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் என பயணிகளின் பாதுகாப்பும், சௌகரியமும் முன்னணியில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், செமி ஸ்லீப்பர் வகை இருக்கைகள் முழங்கால்கள் வரை நீட்டிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதோடு, தீ விபத்து போன்ற அவசர சூழ்நிலைகளில் பயணிகளை பாதுகாக்கும் வகையில், பேருந்தின் உள்ளே தண்ணீர் தெளிக்கும் பிரத்யேக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.