இந்த 2025 ஆம் ஆண்டு, இந்தியாவில் அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த ஆண்டாக கூறப்படுகிறது. குறிப்பாக பண்டிகை கால ஆன்லைன் விற்பனை, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார மந்தநிலை, விலை உயர்வு, நுகர்வோர் தயக்கம் போன்ற காரணங்களால் ஆன்லைன் விற்பனை மந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி குறைப்பு, விலை குறைப்புகள், வேகமான டெலிவரி சேவைகள் மற்றும் இளம் தலைமுறையின் அதிக ஈடுபாடு ஆகியவை சந்தையை மீண்டும் இயக்கத்தில் கொண்டு வந்தன.
ஒவ்வொரு ஆண்டும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் சிறப்பு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. அதன் உச்சமாக, செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கிய பண்டிகை கால விற்பனை, இந்திய இ-காமர்ஸ் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்தது. முதல் வாரத்திலேயே ஆன்லைன் விற்பனை 60,700 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த 2025 ஆம் ஆண்டு 29 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்தது.
இதையும் படிக்க : டிசம்பர் 31 தான் கடைசி.. அதற்குள் பான் கார்டில் இதை செய்யவில்லை என்றால் சிக்கல்!
மொபைல் போன்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பெரிய மதிப்புள்ள பொருட்கள் இந்த ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்களாக அமைந்தன. குறிப்பாக ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், சில முக்கிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் அதிக செலவு காரணமாக பொருட்கள் வாங்க தயங்கிய பலரும் இந்த ஆண்டு பொருட்களை வாங்க காரணமாக அமைந்தது.
இந்த 2025 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றமாக, ஜென் Z தலைமுறையினரின் பங்கும் அதிகரித்தது. ஆன்லைன் விற்பனையில் இவர்களின் பங்கு கடந்த ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்தது. பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமல்லாமல், பிராண்ட் மதிப்பு, டெலிவரி வேகம், ரிட்டர்ன் வசதி போன்றவை இளம் வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஈர்த்தது.
கிராமபுறங்களில் விற்பனை அதிகரிப்புவழக்கத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இ-காமர்ஸ் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்லது. இந்த 2025 ஆம் ஆண்டு ஆன்லைன் விற்பனையின் பெரும்பகுதி மெட்ரோ நகரங்களைத் தாண்டி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களின் மூலம் நடைபெற்றது. இது இ-காமர்ஸ் துறையின் பரவலான வளர்ச்சியைக் காட்டுகிறது.
மளிகை பொருட்கள் போன்ற இ-காமர்ஸ் சேவைகளும் இந்த ஆண்டில் பெரிய வளர்ச்சி கண்டன. குறிப்பாக 10 முதல் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் வசதிகள், பண்டிகை காலத்தில் அதிக வரவேற்பைப் பெற்றன. பரிசு பொருட்கள், இனிப்புகள், தினசரி தேவைகள் போன்றவை ஆன்லைனில் அதிகம் விற்பனையாகியுள்ளன. இந்த 2025 ஆம் ஆண்டு, சலுகை அடிப்படையிலான விற்பனையிலிருந்து, தேவை அடிப்படையிலான வளர்ச்சிக்கு இ-காமர்ஸ் துறை நகர்ந்த ஆண்டாகவும் பார்க்கப்படுகிறது. முன்பு போல ஆரம்ப நாட்களில் மட்டும் அதிக விற்பனை, பின்னர் மந்தம் என்ற நிலை முற்றிலும் மாறி, இந்த ஆண்டு பண்டிகை காலங்கள் முழுவதும் விற்பனை நிலையாக தொடர்ந்தது.
இதையும் படிக்க :தங்க நகை கடனுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. வங்கிகள் எடுத்த முக்கிய முடிவு!
இந்தியாவின் மொத்த பண்டிகை கால ஆன்லைன் விற்பனை 1.2 லட்சம் கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு வளர்ச்சியை குறிக்கிறது. நிபுணர்கள் பார்வையில், 2025 என்பது இந்திய இ-காமர்ஸ் துறைக்கு ஒரு பொற்காலம் என தெரிவிக்கின்றனர். விலை சலுகை என்று மட்டும் இல்லாமல், நம்பகத்தன்மை, டெலிவரி வேகம், சேவை தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவை இந்த மாற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம், உலகளவில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு, இந்திய இ-காமர்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.