சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. ஒரு ஏழைத் தம்பதி சாதாரண கீ-பேட் போன் வாங்குவதற்காக ஒரு மொபைல் கடைக்குச் செல்கின்றனர். தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயங்களைச் சிறு சேமிப்பாகத் தனது சேலையின் முந்தானையில் முடிந்து வைத்திருந்த அந்தப் பெண், மிகுந்த எதிர்பார்ப்புடன் அதனை எடுத்து கவுண்டரில் வைக்கிறார்.
ஆனால், அந்த போன் வாங்குவதற்கு அவர்களிடம் போதுமான பணம் இல்லை. கடைக்காரர் தங்களைத் திட்டி வெளியே அனுப்பிவிடுவாரோ என்ற பயம் அந்த ஏழைத் தம்பதியின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
View this post on Instagram
A post shared by Govind Jaiswal (@govinda_jaiswal_obra)
அந்தத் தம்பதியின் பயத்திற்கு மாறாக, கடைக்காரர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பணம் குறைவாக இருந்த போதிலும், அதனை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அவர், அந்தத் தம்பதிக்கு மரியாதையுடன் புதிய செல்போனை வழங்கினார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 57 லட்சம் லைக்குகளையும் குவித்து வருகிறது. “இன்றும் மனிதாபிமானம் உயிரோடுதான் இருக்கிறது” என நெட்டிசன்கள் அந்த கடைக்காரரை ‘ரியல் ஹீரோ’ எனப் புகழ்ந்து வருகின்றனர். வறுமையின் வலியை உணர்ந்த ஒருவரால்தான் இப்படிச் செய்ய முடியும் எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.