மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தின் அம்பா (Ambah) பகுதியில், மாதாடீன் சர்மா (60) என்ற முதியவர் தனது மிதிவண்டியில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் இரண்டு காளைகள் ஆக்ரோஷமாக ஒன்றுடன் ஒன்று மோதிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
எதிர்பாராதவிதமாக, சண்டையிட்டுக் கொண்டிருந்த காளைகள் வேகமாக வந்து முதியவர் மீது மோதின. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வைரலாகிப் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை முறையாகக் கட்டுப்படுத்தாததே இந்த உயிரிழப்புக்குக் காரணம்” என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
முறையான தெருவிளக்கு வசதி இல்லாததும், தெருக்களில் அலையும் மாடுகளைக் கோசாலைகளுக்கு அனுப்பாததுமே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என உள்ளூர் கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.