ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த முத்திரெட்டி வாணி (19) என்ற இளம்பெண், தொடர்ச்சியாக பல இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், மணமகன் வாணியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ரெயிலில் பயணித்துள்ளார்.
விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்தபோது, கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலிலிருந்து இறங்கிய வாணி, மீண்டும் ரெயிலில் ஏறவில்லை. இதனால் பதறிய மணமகன் ரெயிலுக்குள் பல இடங்களில் தேடியும் வாணி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தார். இதனிடையே, மணமகன் குடும்பத்தினர் திருமண செலவுக்காக வாணியின் குடும்பத்தினருக்கு வழங்கிய ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் வாணி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனால் மணமகன் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி மற்றும் கோபம் அடைந்தனர். தொடர்ந்து, வாணி தனது அத்தை சந்தியா என்பவரின் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்று மணமகன் குடும்பத்தினர், வழங்கிய பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு கேட்டபோது, சந்தியா மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுவயதிலேயே தாயை இழந்த வாணி, தந்தையிடமிருந்து பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்து வந்த நிலையில், அவரது அத்தை சந்தியா சிறுவயதிலிருந்தே அவரை தவறான பாதைக்கு தள்ளியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணம் ஆகாத இளைஞர்களை குறிவைத்து, வாணியை அவர்களுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் நகை மற்றும் பணத்துடன் இருவரும் தப்பிச் செல்வது இவர்களின் வழக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 8 இளைஞர்களை அவர்கள் ஏமாற்றியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடுவது வாணியின் வழக்கமாக இருந்ததாகவும், 9-வது திருமணத்தில்தான் அவர் போலீசாரிடம் சிக்கி, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து வாணியும், அவரது அத்தை சந்தியாவும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில், வாணியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி, கேசவரெட்டி உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அவர்கள், வாணியுடன் எடுத்த திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் வழங்கியுள்ளனர். அவற்றை கைப்பற்றிய போலீசார், வாணி மற்றும் சந்தியாவை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் 19 வயது இளம்பெண் தொடர்ச்சியாக 9 இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய இந்த சம்பவம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.