தொடர் விடுமுறை-பண்டிகைகள்…சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!
TV9 Tamil News December 27, 2025 08:48 PM

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இத்துடன், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் தங்களது பொழுதை கழிப்பதற்காக பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழக மக்களுக்கு சுற்றுலா என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது கொடைக்கானலும், ஊட்டியும் தான். தற்போது, இந்த இரு இடங்களில் அதிக அளவு உறை பனி நிலவி வருகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், இந்த கால சூழ்நிலையை பார்ப்பதற்காகவும், அனுவிப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சாரை சாரையாக படையெடுத்து வருகின்றன.

சுற்றுலாத் தலங்களில் குவியும் பொது மக்கள்

இதே போல ஏற்காடு, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் அதிக அளவு பொதுமக்கள் குவிந்துள்ளனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளான கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி, மதுரை, மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து பொழுதை போக்கி வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ள நிலையில், ஏராளமான நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை… புதுச்சேரி அரசு விதித்த கட்டுப்பாடுகள்

விடுதிகளில் அறை எடுத்து தங்கியிருந்து

இந்த நீர்வீழ்ச்சிகளில் நீராடுவதற்காகவும், சுற்றி பார்ப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, ஒகேனக்கல், பாபநாசம், குற்றாலம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பொதுமக்கள் குடும்பங்களுடன் வருகை தந்துள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கி இருந்து சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இதே போல, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலங்களில் தற்போது தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. இங்கு நீராடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் பகுதியில் உள்ள சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட அருவிகளின் மிதமான தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்த பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகளவு குவிந்து வருகின்றனர்.

ஆன்மீக தலங்களில் குவியும் பொதுமக்கள்

இதே போல, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆன்மீக தலங்களை நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். இதனால், பிரபலமான கோயில்களில் அதிகளவு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணமானது ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை நாட்கள் வரை தொடர்ந்து நீடிக்கும். இதனால், சுற்றுலா பயணிகளையும், சுற்றுலா தலங்களையும் நம்பி இருக்கும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: புத்தாண்டு அன்று கனமழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.