பணம் பங்கு பிரிப்பதில் தகராறு…பாஜக நிர்வாகி வீடு சூறை. சொந்த கட்சியினர் உள்பட 5 பேர் கைது!
TV9 Tamil News December 28, 2025 02:48 AM

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள பரத்வாஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓம் சக்தி செல்வமணி. இவர், பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவில், பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஓம் சக்தி செல்வமணி பங்கேற்றார். பின்னர், அவர் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்க முயன்றதுடன், செல்வமணியின் கைபேசியை பறித்தது. இதனால், உஷாரான ஓம் சக்தி செல்வமணி அங்கிருந்து தப்பி ஓடி அருகில் உள்ள அவரது வீட்டின் உள்ளே சென்று கதவை உள் பக்கமாக பூட்டித் கொண்டார்.

பாஜக நிர்வாகி வீட்டை சூறையாடி கும்பல்

வீட்டின் உள்ளே செல்வமணி, அவரது மனைவி, மகள் ஆகியோர் இருந்தனர். கதவை திறக்க சொல்லி அந்த கும்பல் மிரட்டியது. ஆனால், கதவு திறக்காததால் கோபமடைந்த அந்த கும்பல் வீட்டை அடித்து சூறையாடியது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பைக்கின் கண்ணாடியை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் இது குறித்து ஓம் சக்தி செல்வமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க: பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!

பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு

அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தது. இந்த நிலையில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், பிரகாஷ், தினேஷ்குமார், சஞ்சய் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்குவதற்காக பாஜக தலைமை வழங்கியிருந்த பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

மேலும் ஒருவருக்கு வலை வீச்சு

இதில், அதன்படி பாஜக மாநிலத் துணைத் தலைவர் அமர்நாத் அறிவுறுத்தலின் பேரில், ஓம் சக்தி செல்வமணி மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சொந்தக் கட்சியை சேர்ந்தவரின் வீட்டை அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் சூறையாடிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: இது இருந்தால் தான் படிவம் 6 ஏற்றுக்கொள்ளப்படும்.. புதிய வாக்காளர்கள் சந்திக்கும் சிக்கல்..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.