சென்னை அசோக் நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தனது காதல் மனைவியை இரு குழந்தைகள் முன்னிலையிலேயே கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் நகர் புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த ஜெனரேட்டர் மெக்கானிக் பிரவீன்குமார் (31), கடந்த 2015-ஆம் ஆண்டு வித்யபாரதி (28) என்பவரைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்கு இரு வீட்டாரும் ஆதரவு வழங்காத நிலையில், பிரவீன்குமார் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பணி முடிந்து மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரவீன்குமாரை வித்யபாரதி கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், பிஞ்சுக் குழந்தைகள் கண்முன்னே வித்யபாரதியைச் சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய வித்யபாரதியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். உயிருக்குப் போராடிய தாயின் அருகே நின்று குழந்தைகள் அழுது கதறியதைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வித்யபாரதியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரவீன்குமாரைக் கைது செய்தனர். காதல் திருமணம் செய்துகொண்டு அன்பு காட்ட வேண்டிய கணவனே மனைவியைக் கொன்றதாலும், பெற்றோர் இன்றி இரு குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.