நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி அரசியல்வாதியாகவும் உருமாறி வருகிறார். கட்சியை துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாகவே விஜய் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை விஜயின் தவெக கழகம் குறி வைத்திருக்கிறது. அந்த தேர்தலில் தவெக பல இடங்களில் வெற்றி பெற்று விஜய் முதல்வராக அமருவார் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் எடுத்தவுடனேயே யாரும் முதல்வராகி விட முடியாது. அரசியலில் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். அதற்கு சரியான கூட்டணி அமைக்க வேண்டும். ஆனால் விஜய் தனியாக செயல்பட்டு வருகிறார். அவரை தேடி மற்றவர்கள் வரவேண்டும் என நினைக்கிறார். அவர் நினைப்பது நடக்காது என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.
ஒரு பக்கம் திமுக ஆதரவாளர்களும், திமுகவினரும், விஜய் ரசிகர்களையும், தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
சினிமா உலகில் இயக்குனராக இருந்து தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ள கரு.பழனியப்பன் விஜய் ரசிகர்களின் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘இன்றைய தலைமுறையினருக்கு ஒன்றும் தெரியாது. 4 வார்த்தை ஒழுங்காக பேசத் தெரியாது.. ஏனெனில் வார்த்தைகள் தெரியாது.. ஏன் வார்த்தைகள் தெரியாது என்றால் படிப்பு கிடையாது.. படித்தால் தானே வார்த்தைகள்.. சிந்தனையும் கிடையாது..
வேற மாதிரி.. வேற லெவல்.. பிளாஸ்ட் என்று மட்டும் பேசுவார்கள். உங்களை வச்சி செய்துடுவோம் என்பார்கள். கூப்பிட்டு பேசினால் 20 வார்த்தைகளுக்கு மேல் பேச தெரியாது. வார்த்தை வளமே அவர்களிடம் கிடையாது.. ஒரே பிளாஸ்டுதான்’ என்று நக்கலடித்திருக்கிறார்.