சென்னையில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதிரிகளிடம் இருந்து தப்பி ஓடி வந்த ரவுடி ஒருவர், பாதுகாப்பு மிகுந்த தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் கத்தியுடன் நுழைந்து போலீசாரிடம் சரணடைந்தார்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அப்பு. இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் இருந்த அப்பு, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வந்த பிறகு, தனது எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதிய அவர், கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அப்பு மயிலாப்பூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரது நடமாட்டத்தை மோப்பம் பிடித்த அவரது எதிரிகள், ஒரு கும்பலாக அப்புவைச் சூழ்ந்துகொண்டுத் தாக்க முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அப்பு சென்னை மெரினா கடற்கரைச் சாலையை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்.
எதிரி கும்பல் விடாமல் துரத்தி வந்ததால், வேறு வழியின்றித் தற்காப்பிற்காகத் தான் வைத்திருந்த கத்தியுடன், அங்கிருந்த தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) அலுவலகத்திற்குள் அப்பு அதிரடியாக நுழைந்தார்.

அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், கத்தியுடன் உள்ளே நுழைந்த நபரைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது அப்பு, "என்னைத் துரத்தி வருகிறார்கள், கொன்று விடுவார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி தன்னிடம் இருந்த கத்தியைப் போலீசாரிடம் ஒப்படைத்துச் சரணடைந்தார்.
உடனடியாக அப்புவைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், அவரை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தன்னைத் துரத்தி வந்த கும்பல் யார் என்பது குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அப்புவை கொலை செய்யத் துரத்தி வந்த கும்பலைத் தேடி வந்த போலீசார், அதில் ஒரு நபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில், உயிருக்கு அஞ்சி டி.ஜி.பி. அலுவலகத்திலேயே ரவுடி ஒருவர் தஞ்சம் புகுந்த சம்பவம் சென்னையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!