முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பாதை அமைத்த தலைவராகவும், உலக அரங்கில் நாட்டின் மரியாதையை உயர்த்திய தொலைநோக்கு அரசியல்வாதியாகவும் டாக்டர் மன்மோகன் சிங் திகழ்ந்தார் என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாளில் ஆழ்ந்த மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரது தொலைநோக்கு தலைமையால் இந்தியா பொருளாதார ரீதியாக வலுவடைந்தது. ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எடுத்த துணிச்சலான, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் இந்தியாவுக்கு உலகளாவிய அடையாளத்தை பெற்றுத் தந்தன.
அவரது பணிவு, நேர்மை மற்றும் கடின உழைப்பு தலைமுறைகளுக்கு ஊக்கமாகத் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கையும், அவரது எளிமையான தன்மையும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.