உத்தரப்பிரதேசத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடனை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மதிப்பிடுவது தவறானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறுகையில், "மொத்த கடன் அளவை மட்டும் வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது, வெறும் உடல் எடையை வைத்து ஒருவரின் தகுதியை தீர்மானிப்பது போன்றது" என விமர்சித்துள்ளார். மற்றொரு எம்.பி.யான ஜோதிமணி, "கல்வி, சுகாதாரம், சமூக நீதி மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால், புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் உத்தரப்பிரதேசம் மனிதவள மேம்பாட்டிற்காக இன்னும் போராடி கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் கடன்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நீண்டகால கட்டமைப்பு முதலீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், எனவே தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி ஒருவரின் கருத்துக்கு, அக்கட்சியின் தமிழக எம்.பி.க்களே பகிரங்கமாக மறுப்பு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva