2025-ஆம் ஆண்டு விரைவில் முடிவடைந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நீங்கள் சில மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
இந்த மாற்றங்கள் பான் கார்டு, ஆதார் எண், வங்கி கணக்குகள், எரிவாயு விலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பாதிக்கப் போகின்றன.
இது தவிர, விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் மற்றும் கடன் தகுதி குறியீடு (கிரெடிட் ஸ்கோர்) அளிக்கும் முறையும் மாறப்போகிறது.
ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் ஆறு முக்கிய மாற்றங்கள் இதோ.
பான்-ஆதாரை இணைப்பது கட்டாயம்
Getty Images ஆதார் மற்றும் பான் இணைக்கப்படாவிட்டால் பல நிதிச் சேவைகள் நிறுத்தப்படும்
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். இந்த காலக்கெடு முடிந்துவிட்டால், நீங்கள் பல சேவைகளைப் பெறுவது நிறுத்தப்படும், மேலும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், வரி கணக்கு தாக்கல் செய்வதிலும், கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் சில நிதிச் சேவைகள் நிறுத்தப்படலாம். தற்போதைய வங்கிக் கணக்குகள் தொடரும், ஆனால் கேஒய்சி புதுப்பிக்கப்படாது. இதனால் புதிய முதலீடுகளைச் செய்வதில் சிரமம் ஏற்படும்.
பான் மற்றும் ஆதாரை இணைப்பது கடினமானது அல்ல. நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 'லிங்க் ஆதார்' என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.
அதில் உங்களுக்கு ஒரு ஓடிபி கிடைக்கும், அதன் மூலம் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும். உங்கள் கார்டு ஏற்கனவே செயலிழந்திருந்தால், 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னரே அதை ஆதாருடன் இணைக்க முடியும்.
இது தவிர, வங்கிகள் யுபிஐ, டிஜிட்டல் பேமெண்ட் தொடர்பான விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளன, அவை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
விவசாயிகளுக்கான புதிய விதிகள்
Getty Images குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது
விவசாயிகளுக்கு தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது, அதன் சில விதிகள் ஜனவரி 1 முதல் மாறுகின்றன.
உதாரணமாக, சில மாநிலங்களில் விவசாயிகளுக்காக பிரத்யேக ஐடி அதாவது அடையாள எண் உருவாக்கப்படும். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தொகையைப் பெற இந்த ஐடி-யை வழங்குவது அவசியமாகும்.
14 மாநிலங்களில் விவசாயிகள் பதிவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், அங்கு புதிய பதிவுகளுக்கு மட்டுமே 'ஃபார்மர் ஐடி' தேவைப்படும் என்றும் சமீபத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விவசாயிகள் பதிவுப் பணி தொடங்கப்படாத மாநிலங்களில், விவசாயிகள் ஐடி இல்லாமலும் பதிவு செய்யலாம் என்று அவர் கூறினார்.
இது தவிர, 'பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்' (PM Fasal Bima Yojana) கீழ், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெற முடியும். ஆனால் அதில் பாதிப்பு ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு
Getty Images
ஏழாவது ஊதியக் குழுவின் காலாவதி தேதி டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. எனவே, ஜனவரி 1, 2026 முதல் எட்டாவது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது குறித்து இதுவரை எந்தத் தெளிவான அறிவிப்பும் வரவில்லை.
ஜனவரி 1, 2026 முதல் எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப்படுமா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என சமீபத்தில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி நாடாளுமன்றத்தில் கூறினார். ஊதியக் குழு அடுத்த 18 மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும், அதன் பின்னரே முடிவு எடுக்கப்படும்.
ஜனவரி மாதத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. சில மாநிலங்களில் பகுதி நேர மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடன் தகுதி குறியீட்டிற்கான (கிரெடிட் ஸ்கோர்) புதிய விதிகள்
Getty Images கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது இனி எளிதாகும்
இன்று எந்தவொரு கடனைப் பெறுவதற்கும் கடன் தகுதி குறியீடு அவசியம் மற்றும் அதன் விதிகள் ஜனவரி 1 முதல் மாறப்போகின்றன. தற்போது கடன் மதிப்பீட்டு முகமைகள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை கடன் தரவைப் புதுப்பிக்கின்றன.
ஆனால் இனிமேல் ஒவ்வொரு வாரமும் தரவைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கும். இதன் காரணமாக கடன் பெறுபவர்களின் மிகவும் துல்லியமான கடன் தகுதி குறியீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் தகுதி குறியீடு குறுகிய காலத்தில் புதுப்பிக்கப்படத் தொடங்கினால் அது வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும், ஏனெனில் முறையான நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களின் கடன் தகுதி குறியீடு வேகமாக மேம்படும்.
நீங்கள் ஏதேனும் இஎம்ஐயை தவறவிட்டு அதன் காரணமாக கடன் தகுதி குறியீடு குறைந்திருந்தால், வழக்கமான இஎம்ஐ-யைச் செலுத்தத் தொடங்கிய பிறகு ஸ்கோரை வேகமாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.
வருமான வரி புதிய படிவங்கள் உள்ளிட்ட மாற்றங்கள்
Getty Images அரசு விரைவில் வரி தொடர்பான புதிய படிவங்களைக் கொண்டு வரவுள்ளது
ஜனவரி 1, 2026 முதல் நாட்டில் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. அதில் வங்கி மற்றும் இதர சில விவரங்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும்.
ஜனவரி மாதம் முதல் வங்கிகள் யுபிஐ மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் விதிகளை மேலும் கடுமையாக்கப் போகின்றன. சிம் சரிபார்ப்பு விதிகளும் கடுமையானதாக மாறும்.
குறிப்பாக வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் மூலம் மோசடி நடைபெற்றதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. அதன் காரணமாக சிம் சரிபார்ப்பு முறை மேலும் தீவிரப்படுத்தப்படும்.
எரிவாயு விலை குறைய வாய்ப்புஜனவரி 1 முதல் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி (குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு) விலையில் யூனிட் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை குறையக்கூடும்.
வாகனங்களில் சிஎன்ஜி பயன்படுத்தப்படுகிறது, சமையல் எரிவாயுவிற்கு பிஎன்ஜி பயன்படுத்தப்படுகிறது.
எரிவாயு விலையை குறைக்கும் புதிய கட்டண முறையை பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் வரி அமைப்பு மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப விலைக் குறைப்பு மாறுபடலாம்.
மறுபுறம், ஜனவரி 1 முதல் விமானங்களுக்கான எரிபொருள் விலையிலும் மாற்றம் ஏற்படக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு