ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அக்கட்சியின் தலைவர் விஜய் மலேசியாவில் மேற்கொண்ட பயணம் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மலேசியாவில் பொதுவாகப் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சாலைப் பேரணி அனுமதி இம்முறை விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும் என்றார்.
தமிழகத்தின் எதிர்காலத்தை ஆளும் தகுதி விஜய்க்கு இருப்பதை உணர்ந்து 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களும் பெண்களும் அவருக்குப் பேராதரவு அளித்து வருவதாகவும், 1972-ல் எம்.ஜி.ஆர் மற்றும் 1988-ல் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சியைப் போன்றதொரு மாற்றம் தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் தெளிவான விவரங்கள் வெளியாகும் என்றார். காங்கிரஸ் நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைய ஆர்வம் காட்டுவது குறித்த கேள்விக்குத் தற்போது வரை அது தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், வரும் பட்சத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பதிலளித்தார்.
கூட்டணி மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய செங்கோட்டையன், விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே தங்களது கூட்டணியில் இணைய முடியும் என்பதில் கட்சி உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.
திருமாவளவன் உள்ளிட்ட மற்ற தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், கொள்கை ரீதியாகத் தங்களது நிலைப்பாட்டை மக்கள் முன்னிலையில் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டதாகவும், மக்கள் உணர்வுகளையே தங்கள் தலைவர் பிரதிபலிக்கிறார் என்றும் விளக்கமளித்தார்.