சென்னை செண்ட்ரல் – விமான நிலையம் ரயில் சேவை ரத்து.. மாற்று வழி பயன்படுத்த மெட்ரோ ரயில் தரப்பில் அறிவுறுத்தல்..
TV9 Tamil News December 30, 2025 06:48 PM

சென்னை, டிசம்பர் 30, 2025: சென்னை சென்ட்ரலிலிருந்து விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், மெட்ரோ ரயிலை நம்பி ஏராளமான மக்கள் தினசரி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரையிலும், சென்னை பரங்கிமலையிலிருந்து சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த மெட்ரோ ரயில் சேவை அதிகாலை நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும், பீக் ஹவர்ஸ் எனப்படும் அலுவலக நேரங்களில் 7 நிமிடத்திற்கு ஒருமுறையும் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை ரத்து:

மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, விரைவாக இலக்கைச் சென்றடையலாம் என்பதன் காரணமாக மக்கள் இதில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், தற்போது சென்னை சென்ட்ரலிலிருந்து விமான நிலையம் செல்லக்கூடிய பச்சை வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை – விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் ரயில் பகுதி நேர ரத்து.. முழு விவரம்..

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடத்தில் அண்ணா நகர் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மறு அறிவிப்பு வரும் வரை மாற்று வழி பயன்படுத்த அறிவுறுத்தல்:

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ய மெட்ரோ ரயில் தொழில்நுட்ப பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மெட்ரோ ரயில் பாதியில் நின்றது. இதன் காரணமாக பயணிகள் பாதி வழியில் இறங்கி, கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் நடந்து அடுத்த நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதால் மக்கள் மெட்ரோ ரயில் சேவையின்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.