தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி தொடங்கி வைத்த ஹாரர்–காமெடி டிரெண்டை, ‘தில்லுக்கு துட்டு’ சீரிஸில் சந்தானம் வரை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். இதே போக்கு தெலுங்கு, இந்தி சினிமாவிலும் பெரிய வசூல் வெற்றிகளை பெற்றுவருகிறது. பேய், காமெடி, குடும்பம், குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையிலான இப்படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.
இந்த வரிசையில், இதுவரை அடிதடி ஆக்ஷன் படங்களிலேயே நடித்துவந்த பிரபாஸ், முதன்முறையாக ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகளை டார்கெட் செய்து நடித்துள்ள படம் தான் ‘தி ராஜாசாப்’. இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் ஜனவரி 10ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
டிசம்பர் 27ஆம் தேதி, விஜய்யின் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா நடந்த அதே நாளில், ‘தி ராஜாசாப்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரைலரைப் பார்த்தால், பாட்டியின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் பிரபாஸ், பேயாக சுற்றும் தாத்தாவின் அரண்மனையில் சிக்கிக் கொள்வதால் ஏற்படும் குழப்பங்கள், காமெடி, பயம் ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்வது தெரிய வருகிறது.
‘பாகுபலி’க்கு பிறகு முழுக்க ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜில் இருந்த பிரபாஸை, இந்த படத்தில் முழுமையான காமெடி கேரக்டராக, குறிப்பாக ஜோக்கர் மாதிரியான கெட்டப்பில் காட்டியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டிரைலரின் கடைசி பகுதியில் பிரபாஸ் அந்த கெட்டப்பில் வருவதை பார்த்த ரசிகர்கள், “பயங்கர ட்ரோல் மெட்டீரியல் கிடைச்சுடுச்சு” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர், “அரண்மனைக்குள் காஞ்சனா வந்த மாதிரி இருக்கு” என்று கமெண்ட் செய்து, இந்த படத்தை ஹாரர்–காமெடி டெம்ப்ளேட்டுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். சிஜி காட்சிகள், மேக்கிங் ஆகியவை பயமுறுத்தும் அளவிற்கோ அல்லது விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கோ இல்லாமல், சுமாரானதாக இருப்பதாகவும் சில ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகும் ‘தி ராஜாசாப்’ படம் உண்மையில் ரசிகர்களை கவருமா, அல்லது ட்ரோல்களிலேயே சிக்குமா என்பது ஜனவரி 9ஆம் தேதிக்குப் பிறகே தெரிய வரும்.