கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள தனியார் நிறுவன பெண்கள் விடுதி ஒன்றில், குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா மற்றும் அவரது காதலரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவி பிரதாப் சிங் ஆகிய இருவரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தனது காதலனின் தூண்டுதலின் பெயரிலேயே நீலுகுமாரி குப்தா விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி, பெண்களின் தனிப்பட்ட காட்சிகளை படம்பிடிக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது. விடுதி பெண்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பெண்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று, மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் அவர்கள் இருவர் மீதும் 'குண்டர் தடுப்புச் சட்டத்தின்' கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, ரவி பிரதாப் சிங் சேலம் மத்திய சிறையிலும், நீலுகுமாரி குப்தா கோவை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Edited by Siva