வானிலை நிலவரம், டிசம்பர் 30, 2025: தமிழகத்தைப் பொறுத்தவரையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறலாம். இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை மட்டுமே நிலவி வருகிறது. ஆனால் வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:இந்த இரண்டின் காரணமாக, டிசம்பர் 30, 2025 தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஏனைய பகுதிகள் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உமன் பவரால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.. மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை:பனிமூட்டம் தொடர்ந்து காணப்படுவதன் காரணமாக தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையின் தாக்கம் குறைந்து வருகிறது. தொடர்ந்து ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் கிட்டத்தட்ட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வரும் சூழலில், உறைப்பனி காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் இந்த உறைப்பனி தொடர்ந்து நிலவி வருகிறது.
மேலும் படிக்க: ராமதாஸ் நடத்தியது பொதுக்குழு அல்ல…அது ஒரு கேலிக் கூத்து…வழக்கறிஞர் பாலு அதிரடி!
தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி உள்ளது. அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் மதுரையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஏனைய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.