'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி
Vikatan December 30, 2025 06:48 PM

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். கோவை மலுமிச்சம்பட்டியில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன், அண்ணாமலை, அரவிந்த் மேனன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

அப்போது நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வள்ளி கும்மி பாடலுக்கு நடனம் ஆடினார்கள். கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகை சென்று, ‘எடப்பாடி எனும் நான்’ என்று பதவியேற்கிற நாள் விரைவில் வரும்.

கொங்கு மண்டலம் அப்போதும், இப்போதும் ஒரு இடத்தில் கூட தவறாமல் வெற்றி பெறும். அதேபோல எல்லா மண்டலங்களிலும் நம் கூட்டணி வெற்றி பெறும். தன் மகன் உதயநிதியை முதலமைச்சராக்குவதற்காக ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன், வேலுமணி, அண்ணாமலை

இங்கு வரும்போது வள்ளி கும்மியாட்டம் பற்றி அண்ணாமலை நிறைய சொன்னார். அதை பார்ப்பதற்கு கண்கள் கோடி வேண்டும். பார்த்தவுடன் ஆட வேண்டும் போலிருந்தது. அதனால் நானும், அண்ணாமலையும் ஆடினோம். நாங்கள் இருவரும் இன்னொரு ஆட்டம் ஆடப் போகிறோம்.

அந்த ஆட்டம் நரேந்திர மோடி, அமித்ஷா என்ன நினைத்து இந்த கூட்டணியை உருவாக்கினார்களோ, அதை நிறைவேற்றுவதற்கான ஆட்டம் இனிமேல் தான் இருக்க போகிறது. வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் ஆடிய ஆட்டத்தை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

அது வேறு மாதிரியானது. நான் கும்மியாட்டத்தைத்தான் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இந்தப் பகுதியில் இருந்து வெற்றியை தொடங்குகிறோம்.” என்றார். முன்னதாக நயினார் தன் பேச்சை தொடங்குவதற்கு முன்பு அண்ணாமலையை தன் நிரந்தர சகோதரர் என்றும், அன்பு இளவல் என்றும் குறிப்பிட்டார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.