“பெண்களுக்கு ரூ.1000 கொடுத்து, குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கடன் ஏற்றிய அரசு” – திமுகவை கடுமையாக தாக்கிய தமிழிசை
Seithipunal Tamil December 31, 2025 12:48 PM

தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் இருப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டும் தமிழ்நாடு அரசு செலுத்தி வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் மற்றும் தரவு பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, சமீபத்தில் தமிழ்நாட்டின் கடன் நிலைமை குறித்து வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவர், “அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரு மடங்கு கடனில் இருந்தது. ஆனால் தற்போது உ.பி-யை விட தமிழ்நாட்டின் கடன் அதிகமாக உள்ளது. வட்டி சுமையில் பஞ்சாப், ஹரியானாவுக்கு பிறகு தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது கவலைக்கிடமான நிலை” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை நேரடியாக குறிவைத்து பேசினார். “தமிழக அரசு தற்போது ரூ.9 லட்சம் கோடி கடனில் உள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கடன் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ரூ.5 லட்சம் கடன் உள்ளது. மாதம் ரூ.1000 கொடுத்துவிட்டு, அந்த குடும்பத்தின் மீது ரூ.5 லட்சம் கடன் ஏற்றியிருப்பதுதான் இந்த அரசின் சாதனை” என விமர்சித்தார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியினருக்கே பொறுக்க முடியாமல் தமிழகத்தின் கடன் நிலை குறித்து அவர்கள் பேசத் தொடங்கி விட்டனர். இது திமுக ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது” என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

அரசு மருத்துவமனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் வசதிகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும். ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொள்வதை விட்டுவிட்டு, மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது” எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பேசிய தமிழிசை, “விஜய் தனியாக அரசியலுக்கு வரலாமா, அணியாக வரலாமா என்ற விவாதம் நடக்கிறது. அணியாக வந்தால் தமிழக மக்கள் உங்களை அணைத்து கொள்வார்கள். தனியாக வந்தால் தனிமைப்படுத்தப்படுவீர்கள். இது அரசியல் விமர்சனம் அல்ல, சமுதாய அக்கறையால் சொல்கிறேன். பாஜக – தவெக இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. பாஜக பலமாக உள்ளது. விஜய் பலவீனமாகிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த கருத்தை தெரிவித்தேன்” என்றார்.

தமிழிசை மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் கருத்துகள், திமுக அரசின் பொருளாதார நிர்வாகம் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கியுள்ள நிலையில், கடன், நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகியவை முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறி வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.