திருவள்ளூர், டிசம்பர் 31, 2025: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது, திமுக அரசை கடுமையாக சாடி சரமாரியாக கேள்விகளை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அதில், 1999ஆம் ஆண்டு திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அப்போது மதவாதக் கட்சியாக தெரியாத பாஜக, அதிமுக கூட்டணி அமைத்தால் மட்டும் மதவாதக் கட்சியாகத் தெரிகிறதா? என கேள்வி எழுப்பினார்.
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்:தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மும்முறையாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு கட்சியும் பொதுக்குழுக் கூட்டம், மாநில மாநாடு, ஆலோசனைக் கூட்டங்கள், பிரச்சாரங்கள் என அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க: 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் – தமிழக அரசு புதிய சாதனை
அதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 30, 2025 தேதியான நேற்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், திமுகவில் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவிகளும் அதிகாரங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிரிகளை வீழ்த்தும் ஒரே கட்சி அதிமுக தான்:“தீய சக்தி திமுக என்று எம்ஜிஆர் அன்றே கூறினார். அதன் பிறகு பல அவதாரங்கள் எடுத்து அந்தக் கட்சியை வீழ்த்தியது அதிமுக மட்டும்தான். இன்றைக்கு புதிது புதிதாக வருபவர்கள் பலவிதமாக பேசுகிறார்கள். ஆனால் எதிரிகளை வீழ்த்தக்கூடிய சக்தி அதிமுகவுக்கே உள்ளது” என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம் – பட்டாசுகள் வெடிக்க தடை… என்னென்ன கட்டுப்பாடுகள்?
தமிழகத்தை 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதிமுக என்பது இன்றோ நேற்றோ தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக – பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி:மேலும், திமுக ஆட்சி அமைந்து 55 மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு எந்தவொரு நன்மையும் இந்த ஆட்சியில் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக–பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு அமைந்தபோது பாஜக நல்ல கட்சியாகத் தெரிந்தது. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியாகத் தெரிகிறதா என எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.