ரயில் பயணத்தில் பாலியல் தொல்லை; படம்பிடித்த துணிச்சல் மாணவி... நமக்கெல்லாம் சொல்லும் பாடம் இதுதான்!
Vikatan December 31, 2025 12:48 PM

சென்னை - கோவை ரயிலில், சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பயணிக்கிறார். அருகே வந்தமர்ந்த ஓர் இளைஞர், பாலியல் தொல்லை தருகிறார். சம்பவத்தின் இந்த இடத்தில் ஒரு பிரேக் விட்டு, நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வோம் தோழிகளே!

வீடு, வழிபாட்டுத் தலங்கள், பயணங்கள், பொது இடங்கள், அலுவலகங்கள் என இப்படியான பாலியல் தொல்லைகளை அனுபவிக்கும்போது, பலரும் ஆற்றும் எதிர்வினைகள்?

மனதுக்குள் திட்டிக்கொள்வது; அருவருப்புடன் அவ்விடம் விட்டு நகர்ந்துவிடுவது; ‘ஹலோ... தள்ளி உட்காருங்க’ என்று சற்றே உரத்த குரலில் சொல்வது... பெரும்பாலும் இவைதானே அந்த எதிர்வினைகள்?

இப்போது, அந்த மாணவி என்ன செய்தார் என்று பார்ப்போம். இளைஞரின் பாலியல் சீண்டல்களை, தன் மொபைலில் அவர் அறியாமல் படம்பிடித்தார். பின்னர், சக பயணிகள் முன் தைரியமாக சத்தம்போட்டுக் கண்டித்தார். அப்போது, ‘கூட்ட நெரிசலில் தெரியாமல் நடந்து விட்டது’ என்று அந்த இளைஞர் சொல்ல, மொபைல் வீடியோவை அனைவரிடமும் காட்டி, அவர் தப்பிக்க வழியேயின்றி அந்த இடத்திலேயே தோலுரித்தார், மாணவி.

அந்த இளைஞர், கோவை, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஷேக் முகமது என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. தற்போது அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பெண்கள் எங்கிருந்தாலும், எங்கு சென்றாலும் நம் உடலைக் காக்கும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டியிருப்பது, கசப்பான உண்மை. ஆனால், அந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் சகித்துச் செல்வதாகவே உள்ளன. குற்றங்கள் தொடர, குற்றவாளிகள் இவ்வாறு தப்பவிடப்படுவதும் முக்கிய காரணமே.

`இதை வெளியே சொன்னால் நமக்கு அசிங்கம்’ என்ற தவறான கருத்து, அடித்து நொறுக்கப் பட்டு வருகிறது. இன்றைய தலைமுறை பெண்கள்... மொபைல் கேமரா, சமூக ஊடகங்கள், சட்ட விழிப்பு உணர்வு ஆகியவற்றை ஆயுதமாக்கி, குற்றவாளிகளை வெளிப்படுத்தும் துணிவு கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு என்பது அரசும் சமூகமும் வழங்க வேண்டிய அடிப்படை உரிமை. அனைத்து இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்புகள், புகார் அமைப்புகள், துரித நடவடிக்கை என கவனம் கொடுக்கப்பட வேண்டும். அதேநேரம், நமக்கான முதல் பாதுகாப்பு வட்டமாக நம்மை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். துணிச்சலான எதிர்வினை, 181, 1091 உள்ளிட்ட ஹெல்ப்லைன் எண்கள் என விரைந்து செயலாற்ற வேண்டும்.

ரயில் சம்பவத்தில், அம்மாணவி நிச்சயமாக அந்த இளைஞரின் முதல் இரை இல்லை. ஆனால், அவரது துணிவு, அந்தக் காமுகரால் தொடர்ந்து பாதிக்கப்படவிருந்த பல பெண்களையும் காப்பாற்றியுள்ளது என்பதையும் சேர்த்தே நாம் யோசிக்க வேண்டும்.

பாலியல் வக்கிரர்களை வெளிச்சத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தருவதும் பொதுக்கடமை தானே தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.