மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை சகித்துக்கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை; இது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே காசகரன்பட்டியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள சொத்திலிருந்து ஆக்கிரமிப்பை காலி செய்ய வேடசந்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உத்தரவிட்டார். ஆனால், அது சட்டவிரோதமானது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என கன்னியம்மாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் தெரிவிக்கையில்; 'அந்நிலம் ஆரம்பத்தில் 'பாதை' என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், மாநில நெடுஞ்சாலைத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் பராமரிப்பில் உள்ளது' என்று தெரிவித்தார்.

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
இவ்விஷயத்தில் எந்த முரண்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சகித்துக்கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை; ஏனெனில் ஆக்கிரமிப்புகள் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என பல வழக்குகளில் நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளதோடு, அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியது போல் ஆட்சேபனைகள் எதுவும் இருந்தால் தெரிவிக்க ஏற்கனவே ஒரு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க மனுதாரர் முயற்சிக்கவில்லை என்றும், அதன் பிறகே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும், இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டு தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து, முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.