ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க பிரான்ஸ் அரசு புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது.
குழந்தைகள் அதிகப்படியான ‘திரை நேரத்தால்’ (Screen Time) பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 15 வயதுக்குக் குறைந்தவர்கள் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருக்க முடியாது என்பதுடன், உயர்நிலைப் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட உள்ளது. கட்டுப்பாடற்ற இணையப் பயன்பாடு குழந்தைகளின் தூக்க முறையைப் பாதிப்பதோடு மனநலச் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் எச்சரித்துள்ள நிலையில், அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்த மசோதாவிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள இந்தச் சட்டம், சட்டச் சிக்கல்களைக் களைந்து வரும் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.