'ஒரு காலத்தில் மலைகள் இருந்தன': ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
BBC Tamil January 02, 2026 06:48 PM
BBC ராஜஸ்தான், ஆல்வாரில் உள்ள ஆரவல்லி மலைகள்

இதமான காலைச் சூரிய ஒளி ஆரவல்லியின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த சரிவுகளில் பரவுகிறது.

சில இடங்களில் இந்த மலைகள் சாலைகளுடன் இணைந்து செல்வதைப் போலவும், வேறு சில இடங்களில் கிராமங்களுக்குப் பின்னால் ஒரு சுவரைப் போலவும் காட்சியளிக்கின்றன.

சில இடங்களில் அவற்றின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது, அதே சமயம் வேறு சில இடங்களில் சுரங்கத் தொழிலால் உருவான ஆழமான பள்ளங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இவைதான் ஆரவல்லி மலைகள், உலகின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்று.

புவியியலாளர்கள் இந்த மலைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று கூறுகின்றனர். ஆனால் இன்று, அவற்றின் வரலாறு அல்ல, அவற்றின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.

குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் டெல்லி வரை பரவியுள்ள ஆரவல்லி வெறும் புவியியல் அமைப்பு மட்டுமல்ல.

இது வட இந்தியாவுக்கு ஒரு இயற்கை அரணாகத் திகழ்கிறது. பாலைவனம் உருவாவதைத் தடுப்பதோடு, நிலத்தடி நீரைச் சேமித்து வைக்கவும், காற்றினால் அடித்து வரப்படும் தூசியைத் தடுக்கவும் இது உதவுகிறது.

ஆனால் இன்று, அதே ஆரவல்லி சட்டப் போராட்டங்கள், சுரங்க குத்தகைகள் மற்றும் 'வளர்ச்சி Vs பாதுகாப்பு' குறித்த விவாதங்களின் மையத்தில் நிற்கிறது.

சட்ட விவாதமும் யதார்த்தமும் BBC ஆரவல்லி மலைகளில் சுரங்கம் தோண்டுவது குறித்த விவாதம் தொடர்கிறது.

சமீபத்திய மாதங்களில், உச்சநீதிமன்றம் ஆரவல்லி மலைத்தொடருக்குப் புதிய வரையறையை அங்கீகரித்தபோது அது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

இந்த வரையறையின் கீழ், 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரமுள்ள சிகரங்கள் மட்டுமே ஆரவல்லியாகக் கருதப்பட்டன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்கள், சமூக ஊடகப் பிரசாரங்கள் மற்றும் ஆரவல்லியின் முக்கியத்துவம் குறித்த தீவிர விவாதங்கள் நடைபெற்றன.

ஆரவல்லியை வெறும் உயரத்தை வைத்து மட்டும் அளவிட முடியாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிட்டனர். இந்த மலைகள் அவற்றின் நிலத்தடி நீர்நிலைகள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்காக முக்கியமானவை.

போராட்டங்களைத் தொடர்ந்து, நீதிமன்றம் தனது உத்தரவுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. ஆரவல்லி தொடர்பான சிக்கல்களைத் தீவிரமாக மறுஆய்வு செய்யுமாறு அது வலியுறுத்தியுள்ளதுடன், ஒரு புதிய உயர்மட்டக் குழுவை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளது.

ஆனால் இந்தச் சட்ட விவாதம் டெல்லி மற்றும் நீதிமன்றங்களில் காணப்படுவதை விட ராஜஸ்தானின் கிராமங்களில் அதிகமாக உணரப்படுகிறது.

ஆல்வார் மாவட்டத்தில் மறையும் மலைகள் BBC ஆல்வார் மாவட்டத்தில் உள்ள லலாவந்தி கிராமம்

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள லலாவந்தி கிராமம் ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கிராமத்தின் ஒரு முனையில் வயல்கள் உள்ளன, மறுமுனையில் ஒரு மலை, அல்லது ஒரு காலத்தில் மலையாக இருந்த ஒன்று நிற்கிறது.

இப்போது அங்கு சுரங்கத் தொழிலால் உருவான ஒரு ஆழமான பள்ளம் உள்ளது. அதன் விளிம்பில் நின்று கீழே பார்த்தால் கற்கள், இடிபாடுகள் மற்றும் தேங்கியுள்ள தண்ணீரைக் காண முடிகிறது.

மறைந்து வரும் இந்த மலையின் விளிம்பில் நின்று கொண்டு, ரமேஷ் சிங் என்ற முதியவர் தனது கையால் சுட்டிக்காட்டி, "ஒரு காலத்தில், அங்கே மலைகள் இருந்தன, இது ஒரு அழகான பள்ளத்தாக்காக இருந்தது. நாங்கள் வானிலையை ரசிக்க இங்கு வருவோம்," என்கிறார்.

இந்தக் கிராமத்தின் நிலப்பரப்பு திடீரென்று மாறவில்லை. ராஜஸ்தான் அரசு 2007-இல் இங்கு சுரங்க குத்தகைகளை வழங்கியது, சில ஆண்டுகளுக்குப் பிறகு சுரங்கப் பணிகள் தொடங்கின.

"இவையெல்லாம் சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கின. அப்போதுதான் வெடிப்புகள் தொடங்கின. மெதுவாக, வீடுகள் அதிர ஆரம்பித்தன. முன்னதாக, தண்ணீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; 30-40 அடி ஆழத்திலேயே தண்ணீர் இருந்தது. இப்போது எல்லாம் வறண்டு போய்விட்டது. குடிப்பதற்கோ விவசாயத்திற்கோ தண்ணீர் இல்லை" என்கிறார் ரமேஷ்.

BBC மலைகள் வெட்டப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மறைந்து போன மலையைச் சுட்டிக்காட்டி, கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மிஸ்ரா என்ற இளைஞர், "ஒரு காலத்தில் இது நீண்ட மற்றும் அகலமான மலையாக இருந்தது. எங்கள் சிறுவயதில் நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாடுவோம்."

லலாவந்தி கிராமத்திற்குள் நுழையும்போது, முதலில் உங்கள் கவனத்தை ஈர்ப்பது வீடுகளின் சுவர்கள். சிலவற்றில் மயிரிழை அளவிலான விரிசல்கள் உள்ளன, மற்ற சிலவற்றில் விரலை நுழைக்கும் அளவுக்கு விரிசல்கள் அகலமாக உள்ளன. சில வீடுகள் பூட்டப்பட்டுள்ளன, அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேறிவிட்டனர்.

புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் கிருஷ்ணா தேவி தனியாக வசிக்கிறார். அவரது கணவர் இறந்துவிட்டார், மகன் மற்றும் மருமகள் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர்.

இந்த வீட்டின் பல பகுதிகளில் இப்போது பெரிய விரிசல்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, "இரவு முழுவதும் வெடிப்புகள் நிகழ்கின்றன, வீடு அதிர்கிறது. சில நேரங்களில் பயத்தின் காரணமாக நாங்கள் இரவு முழுவதும் முற்றத்திலேயே தூங்குகிறோம்" என கிருஷ்ணா தேவி கூறுகிறார்.

கிராமத்துப் பெண்கள் தலையில் தண்ணீர்க் குடங்களைச் சுமந்து கொண்டு தூரத்திலிருந்து வருவதைக் காண முடிகிறது. முன்னர் கிணறுகள் மற்றும் கை-பம்புகள் அருகிலேயே இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போது தண்ணீர் என்பது ஒரு தினசரி போராட்டமாகிவிட்டது.

ஒரு கிராமத்துப் பெண், "மலை இப்போது இல்லை. தண்ணீரும் போய்விட்டது. குழந்தைகள் பயப்படுகிறார்கள். இரவில் வெடிப்புச் சத்தம் கேட்டால், அனைவரும் எழுந்து விடுகிறார்கள்." என்கிறார்.

தண்ணீர் பிரச்னை BBC ஜல் ஜீவன் மிஷனின் கீழ் கிராமத்தில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

லலாவந்தியின் மிகப்பெரிய கவலை தண்ணீர். முன்னர் 30-40 அடியில் தண்ணீர் கிடைத்த நிலையில், இப்போது ஆழ்துளைக் கிணறுகளை 250 முதல் 350 அடி வரை தோண்ட வேண்டியுள்ளது என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டியை ஒரு இளைஞர் நமக்குக் காட்டுகிறார். தொட்டி புதியது, ஆனால் அதன் சுவர்களில் விரிசல்கள் தெளிவாகத் தெரிகின்றன.

"இதில் இன்னும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை, அதற்குள் வெடிச்சத்தத்தால் இது விரிசல் ஏற்பட்டு விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, ஆனால் என்ன பயன்?" என அவர் கேட்கிறார்.

சுரங்கப் பணிகள் சட்டப்பூர்வமான குத்தகைகளின் கீழ் நடைபெறுவதாகவும், கிராம மக்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் அரசின் சுரங்கத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தொட்டியில் உள்ள விரிசல்கள் கட்டுமானத் தரம் குறைவாக இருப்பதாலும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அரசு கூறுகிறது. இருப்பினும், அரசின் விசாரணை அறிக்கை சுரங்க வெடிப்புகளின் பங்கை நிராகரிக்கவில்லை.

ராஜஸ்தான் சுரங்கத் துறையின் கண்காணிப்பு சுரங்கப் பொறியாளர் எஸ்.என். ஷக்தாவத் பிபிசியிடம் பேசுகையில், "கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாங்கள் விசாரிப்போம்," என்றார்.

ஆனால் எல்லாம் சட்டப்படி நடக்கிறது என்றால், தாங்கள் மட்டும் ஏன் இந்த இழப்பின் சுமையை சுமக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்கிறார்கள்.

கிராம மக்களிடையே நிலவும் அச்சம் BBC ஒரு காலத்தில் மலைகள் இருந்த இடத்தில், இப்போது ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன.

கிராமத்திற்கு வெளியே, ஒரு இளைஞர் சேதமடைந்த மலைக் குன்றுகளைப் பார்த்தவாறே தனது சிறுவயது பற்றிப் பேசுகிறார்.

"நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாடுவோம். மலை அகலமாகவும் தட்டையாகவும் இருந்தது. இப்போது பள்ளங்கள் உள்ளன. அவற்றில் தண்ணீர் நிரம்புகிறது, விலங்குகள் விழுந்து இறக்கின்றன."

தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட மற்றொரு இளைஞர், "முன்னர் மலைகள் இருந்தன, கிராமத்தில் ஆழ்துளைக் கிணறுகள் இருந்தன, நாங்கள் நாள் முழுவதும் விளையாடி, குளிப்போம். எங்கள் குழந்தைகளுக்கு இனி அத்தகைய அமைதியான குழந்தைப்பருவம் கிடைக்காது," என்கிறார்.

"இந்த மலைகள் குடும்பத்தின் பெரியவர்களைப் போல, புயல் மற்றும் மழையிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளித்தன. அவை ஒரு குடை போல, ஒரு கவசம் போல இருந்தன. ஆனால் இப்போது வறண்ட கிணறுகள், மாசுபாடு மற்றும் அசுத்தமான காற்று மட்டுமே உள்ளன. எங்கள் குழந்தைகளுக்கு மாசுபாட்டையும் அச்சத்தையும் மட்டுமே விட்டுச் செல்வோம் என்று தோன்றுகிறது." என சோகமாகக் கூறுகிறார் அவர்.

வளர்ச்சியும் இடம்பெயர்தல் குறித்த பயமும் BBC சீகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இயங்கும் சுரங்கங்கள்

ஆல்வாரிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில், சீகர் மாவட்டத்தின் 'நீம் கா தானா' பகுதியில் ஆரவல்லி மலைத்தொடர் தனது வடிவத்தை மாற்றுகிறது.

இங்கே காடுகள் அடர்த்தியானவை, குடியிருப்புகள் சிறியவை மற்றும் மக்கள் பெரும்பாலும் மலைகளையும் காடுகளையும் சார்ந்துள்ளனர்.

இப்பகுதி பெரும்பாலும் பழங்குடியினர் வாழும் பகுதியாகும், மண் மற்றும் செங்கல் வீடுகள், விளைநிலங்கள் மற்றும் விரிவான குன்றுகள் உள்ளன. பல பகுதிகளில் பெரிய அளவில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் சுரங்கங்கள் ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

சுரங்கத்திற்கு அருகிலுள்ள ஒரு மலையடிவாரத்தில் வசிக்கும் உள்ளூர்வாசியான மாமராஜ் மீனா, "நாங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். கால்நடை வளர்ப்பு, விவசாயம் என அனைத்தும் இந்த மலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுரங்கம் வந்தால் நாங்கள் வீடற்றவர்களாகி விடுவோம்," என்கிறார்.

மாமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமை இல்லை, இது அவர்கள் வெளியேற்றப்படுவது குறித்த கவலையை மேலும் அதிகரிக்கிறது.

வளர்ச்சி அவசியம், ஆனால் மக்களை அழிக்கும் வளர்ச்சி அல்ல என்று மாமராஜ் கூறுகிறார். "இது வன நிலம், பழங்குடியினர் பகுதி. எங்களுக்கு உரிமைகள் உள்ளன. நாங்கள் எங்கள் போராட்டத்தை நடத்துவோம்" என்கிறார் அவர்.

உள்ளூர் மக்களின் முயற்சியால் பாதுகாக்கப்படும் கிர்ஜன் நதி BBC உள்ளூர் மக்களின் முயற்சியால் பாதுகாக்கப்பட்ட கிர்ஜன் நதி

இங்கே கிர்ஜன் நதி பள்ளத்தாக்கு பல வண்ணங்களின் கலவையாக உள்ளது: பறவைகளின் ஒலி, செழிப்பான பசுமை, பாயும் நீர் மற்றும் கடுகு வயல்கள்.

உள்ளூர் மக்கள் இணைந்து இப்பகுதியைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார்கள்.

ஆனால் சில கிலோமீட்டர் தொலைவில், சுரங்கங்களின் சத்தம் மற்றும் தூசியில் இந்த அமைதி தொலைந்து போகிறது.

ஒரு காலத்தில் இப்பகுதியின் வாழ்வாதாரமாக இருந்த கஸாவதி நதி இப்போது பல இடங்களில் வறண்டு காணப்படுகிறது. சுரங்கப் பகுதிகளுக்கு அருகில் கல் உடைக்கும் இயந்திரங்கள் உள்ளன.

இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் சுரங்கத் தொழில், நிலத்தில் எவ்வளவு மாறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த வேறுபாடு காட்டுகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எச்சரிக்கை BBC கஸாவதி நதிக்கு அருகில் இயங்கும் கல் குவாரிகள்

பல தசாப்தங்களாக ஆரவல்லியில் சுரங்கத் தொழிலுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கைலாஷ் மீனா, "உயிர்களைப் பலி கொடுத்து வளர்ச்சி காண்பதற்கான தரநிலையை யார் நிர்ணயித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆரவல்லி மலைத்தொடர் ராஜஸ்தானின் உயிர்நாடி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் உயிர்நாடி என்று அவர் கூறுகிறார். இது வெப்பக் காற்றைத் தடுக்கிறது, நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது மற்றும் உள்ளூர் மக்கள் இதைச் சார்ந்துள்ளனர்.

"இங்குள்ள காற்று, நீர், நதி, மலைகள், மரங்கள் ஆகியவற்றின் மீது இங்குள்ள மக்களுக்கே முதல் உரிமை உண்டு. இவற்றை நாம் அழித்தால் இந்த மக்கள் எங்கே போவார்கள்? ஒருவருக்கு ஒரு குடிசை கூட இல்லாத நிலையையும், இன்னொருவருக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பண்ணை வீடுகளும் இருக்கும் சூழலை நாம் ஏன் உருவாக்குகிறோம்?" என கைலாஷ் மீனா கூறுகிறார்.

ஆரவல்லி ஜன் விராசாத் அபியான் அமைப்புடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் நிபுணர் நீலம் அலுவாலியாவும் இதேபோன்ற கவலைகளை வெளிப்படுத்துகிறார். "ஆரவல்லி காடுகள் பாலைவனம் பரவுவதைத் தடுக்கின்றன. இங்கு சுரங்கம் தோண்டுவது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் அழித்து வருகிறது, இந்த இழப்பை மீட்டெடுக்க முடியாது." என அவர் கூறுகிறார்.

சமீபத்தில், ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை குறித்த தனது முடிவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இருப்பினும், இந்த வரையறை ஏன் அவசியமானது என்ற கேள்வி நீடிக்கிறது.

BBC நீலம் அலுவாலியா

நீலம் அலுவாலியா, "ஆரவல்லியை ஏன் இவ்வளவு குறுகிய வரையறைக்குள் சுருக்க வேண்டும்? இமயமலைக்கு உயரம் அடிப்படையிலான வரையறை இல்லை, கங்கைக்கு ஆழம் அடிப்படையிலான வரையறை இல்லை, பிறகு ஏன் ஆரவல்லிக்கு மட்டும்?" என்கிறார்.

ஆரவல்லி வரையறை குறித்த தனது உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, புதிய சுரங்கங்களுக்குத் தடை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதுடன், ஆலோசனைக் கூட்டங்களைத் தொடங்குவதற்கான அறிகுறியையும் வெளிப்படுத்தியுள்ளது.

இது ஒரு வாய்ப்பு, ஆனால் உள்ளூர் மக்களின் குரல்கள் கேட்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆரவல்லி பிராந்தியத்தின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கை நடத்தப்பட்டால் மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

"இப்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் நிலையான சுரங்கத் திட்டம் குறித்து மக்களிடம் ஆலோசனை நடத்துவோம் என்று கூறுகிறது. எங்களின் கோரிக்கை தெளிவானது. நீங்கள் ஆரவல்லியைப் பாதுகாப்பதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும், சுரங்கத் திட்டத்தைப் பற்றி அல்ல" என நீலம் அலுவாலியா கூறுகிறார்.

"ஆரவல்லி என்பது உச்சநீதிமன்றத்திற்கும் அமைச்சகத்திற்கும் இடையில் அமர்ந்து முடிவு செய்யக்கூடிய ஒரு கோப்பு அல்ல. அது தண்ணீர் மற்றும் காற்றிற்கான நமது உயிர்நாடி. அந்த நிலத்தில் வாழும் மக்களிடம் கேட்காமல், அவர்களுடன் பேசாமல் நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியாது. இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் தவறானது, இதை ஏற்க முடியாது." என்றும் அவர் கூறுகிறார்.

மத்திய அரசு கூறுவது என்ன?

சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு ஆரவல்லி தொடர்பான சமீபத்திய அறிக்கைகளில் அதன் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. இதில் புதிய சுரங்க குத்தகைகளுக்கு முழுமையான தடை மற்றும் நிலையான திட்டம் ஆகியவை அடங்கும்.

டிசம்பர் 24, 2025 அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவுகளின்படி, குஜராத் முதல் டெல்லி வரையிலான ஒட்டுமொத்த ஆரவல்லி பிராந்தியத்திலும் புதிய சுரங்க குத்தகை அல்லது ஏற்கனவே உள்ளவற்றைப் புதுப்பிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலையான சுரங்க மேலாண்மைத் திட்டம் (Sustainable Mining Management Plan) இறுதி செய்யப்படும் வரை புதிய சுரங்க குத்தகைகள் வழங்கப்படாது என்று அமைச்சகம் கூறுகிறது.

முழு ஆரவல்லி பிராந்தியத்தின் 'ஒட்டுமொத்த தாக்க மதிப்பீட்டை' (cumulative impact assessment) மேற்கொள்ளவும், சூழல் உணர்திறன் மண்டலங்களைக் கண்டறியவும், அறிவியல் அடிப்படையில் நிலையான சுரங்கத் திட்டத்தைத் தயாரிக்கவும் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

BBC ஆரவல்லி மலைகளிலிருந்து உருவாகும் கிர்ஜன் நதியின் தெளிவான நீர்

இந்தத் திட்டம் ஆலோசனைக்காக பொது வெளியில் முன்வைக்கப்படும் என்று அரசு கூறுகிறது.

ஆரவல்லி பிராந்தியத்தில் பாதுகாக்கப்பட்ட மண்டலமும் விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு கூறுகிறது.

ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பகுதிகள் தவிர, உள்ளூர் நிலப்பரப்பு, சூழலியல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சுரங்கத் தொழில் தடை செய்யப்பட்ட பகுதிகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த உயரம் அடிப்படையிலான ஆரவல்லி வரையறையை ஆதரித்திருந்தார்.

ஆரவல்லி சர்ச்சைக்குப் பிறகு, இந்த புதிய வரையறை மூலம் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆரவல்லி பாதுகாக்கப்படும் என்று பூபேந்திர யாதவ் கூறியிருந்தார்.

இருப்பினும், டிசம்பர் 28 அன்று உச்சநீதிமன்றம் தனது முடிவைத் தள்ளிவைத்தபோது பூபேந்திர யாதவ் அதை வரவேற்றார். ஆரவல்லியைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

குருகிராமின் ஆரவல்லி BBC குருகிராமின் ஆரவல்லி பல்லுயிர் பூங்கா

குருகிராமின் ஆரவல்லி பல்லுயிர் பூங்கா ஒரு காலத்தில் சுரங்கப் பகுதியாக இருந்தது. இன்று, இது சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் செழிப்பான காடாக உள்ளது. சேதத்திற்குப் பிறகும் மீட்சி சாத்தியம் என்பதை இது காட்டுகிறது.

ஆனால் மீட்டெடுப்பதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அவசியம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

ஆரவல்லி பல்லுயிர் பூங்காவின் கண்காணிப்பாளர் விஜய் தஸ்மானா, "ஆரவல்லிக்கு சுரங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் விரிவடைந்து வரும் நகரங்களால் ஆபத்து உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், எல்லாவற்றையும் விடப் பெரிய அச்சுறுத்தல் என்னவென்றால், நம் வாழ்வில் ஆரவல்லியின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான்," என்கிறார்.

"இங்கே நாம் சுரங்கத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு பகுதியை மீண்டும் பசுமையாக மாற்றியுள்ளோம்," என்கிறார் தஸ்மானா.

"மாற்றம் சாத்தியம், ஆனால் அதன் அர்த்தம் ஏற்கனவே நல்ல நிலையில் இருப்பதை அழிப்பது என்பதல்ல. இன்று, மீட்டெடுப்பதை விடப் பாதுகாப்பதற்கே அதிகத் தேவை உள்ளது."

BBC ஆரவல்லி பிரச்னை தொடர்பான விசாரணை இப்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் இடையே உள்ள மங்கர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அந்தக் கிராமம், சூரிய அஸ்தமனத்தின் போது இன்னும் அழகாகக் காட்சியளிக்கிறது.

சூரியன் மெதுவாக ஆரவல்லி மலைகளுக்குப் பின்னால் மறைகிறது. ஒளியுடன் சேர்ந்து மலைகளின் நிழல்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.

பல ஆண்டுகளாக இங்கு சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பாக பணியாற்றி வரும் உள்ளூர் சமூக ஆர்வலர் சுனில், "ஆரவல்லி உயிர் பிழைக்காவிட்டால், இந்த அழகான காட்சிகள் இருக்காது, இந்த அமைதி இருக்காது. இந்த நகரங்கள் கட்டுப்பாடற்று வளர்ந்தால், அவை இந்த மலைகளையே தின்றுவிடும்," என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.