உத்தரகோசமங்கை: இன்று திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னதி - சந்தனம் களையப்படும் அபூர்வ நிகழ்வு!
Dinamaalai January 02, 2026 06:48 PM

உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னதி - சந்தனம் களையப்படும் அபூர்வ நிகழ்வு!ராமநாதபுரம்: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அதிசயமான உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம் படிகளைதல் மற்றும் ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெறுகிறது. பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜரைச் சந்தனக் காப்பின்றித் தரிசிக்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இப்போதே ராமநாதபுரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள சுமார் 6 அடி உயர நடராஜர் சிலை, விலைமதிப்பற்ற அபூர்வமான பச்சை மரகதக் கல்லால் ஆனது. இந்தச் சிலையானது ஒளி மற்றும் ஒலி அதிர்வுகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் இந்தச் சந்தனம் களையப்பட்டு, அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் மரகத மேனியுடன் இறைவனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

இன்று காலை 8:30 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு, திருமேனியில் உள்ள பழைய சந்தனம் முழுமையாகக் களையப்படும். சந்தனம் களையப்பட்ட பின் பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் திருநீறு உள்ளிட்ட 32 வகையான மங்கலப் பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகங்களுக்குப் பிறகு, பச்சை மரகத மேனியுடன் ஜொலிக்கும் நடராஜரைத் தரிசிக்க இரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

நாளை ஜனவரி 3 அதிகாலை மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு (சந்தனக் காப்பு), அடுத்த ஓராண்டிற்கு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும் என்பதால், மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: 1000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மற்றும் 36 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை சந்திப்பு முதல் கோயில் வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் புத்தேந்தல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும்.

கோயிலைச் சுற்றிப் போலி சந்தனங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும் போலீசார் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வி.ஐ.பி (VIP) பாஸ்களை முறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.