“அமித்ஷா வருகையும், அரசியல் மாற்றமும்”… மீண்டும் இணையும் ஓபிஎஸ் இபிஎஸ்..? பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி..!!
SeithiSolai Tamil January 02, 2026 06:48 PM

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பொங்கலுக்குப் பிறகு பாஜக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. புத்தகம் ஏந்த வேண்டிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் அரிவாள் ஏந்தும் சூழல் உருவாகியுள்ளது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை, நீதி நிர்வாகமும் சரியில்லை. வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. கடும் நிதி நெருக்கடியில் உள்ள திமுக அரசு, எப்படியாவது தனியாரிடம் கடன் வாங்கியாவது பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 4-ஆம் தேதி திருச்சி வருகிறார். அங்கிருந்து புதுக்கோட்டைக்குச் சென்று, ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து 5-ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைவாரா என்பது எனக்குத் தெரியாது, அது அந்த உட்கட்சி விவகாரம். இருப்பினும், அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். தேர்தல் கூட்டணி குறித்த எங்களது இறுதி நிலைப்பாடு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.