அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சேர்க்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறை வாகனத்திலேயே ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற சம்பவம் கரூரில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள அரசுப் பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களைப் போலவே இங்கும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
View this post on Instagram
A post shared by Ilaya Bharatham (@ilayabharathamib)
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரை ஒட்டும் இயக்கத்தை அக்கட்சியினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கரூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, கருப்பையா உள்ளிட்டோர் தலைமையில் அக்கட்சியினர் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை அழைத்துச் செல்வதற்காக, போலீசார் ஒரு தனியார் பேருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டக்காரர்களை அந்தப் பேருந்தில் ஏற்ற முயன்றபோது, ஆர்வமிகுதியில் சில நிர்வாகிகள் அந்த வாகனத்தின் முன்பகுதியிலும் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரை ஒட்ட முயன்றனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், “தம்பி.. கொஞ்சம் இருங்க.. இது பிரைவேட் (தனியார்) பஸ்ஸுப்பா!” என்று கூறி அவர்களைத் தடுத்தனர். போராட்டக் களத்தின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், போலீசாரின் இந்த நகைச்சுவையான எதிர்வினை அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. போலீசாரும் சிரித்தபடி அவர்களை வாகனத்தில் ஏற்றினர்.
மேலும் தற்போது இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.