சென்னை: 'மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!' - குண்டுக்கட்டாக கைது
Vikatan January 03, 2026 01:48 AM

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாள்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர்.

கடந்த 50 நாள்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தேனாம்பேட்டையில் உள்ள திமுக-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்று கைதாகினர்.

அறிவாலய முற்றுகையைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடம், ரிப்பன் பில்டிங் போன்ற இடங்களையும் முற்றுகையிட்டு கைதாகினர். இந்நிலையில், இன்று காலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

'நாங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக போராடவில்லை. எங்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக போராடுகிறோம். எங்களை சிறையில் அடைத்தாலும் போராடுவோம்' என்கிறார் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.