வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 2 மணியளவில், அமெரிக்க ராணுவம் ஒரே நேரத்தில் ஏழு இடங்களில் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த திடீர் தாக்குதலால் வெனிசுலா முழுவதும் பதற்றம் அதிகரித்த நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு உலக நாடுகளை உலுக்கியது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டிரம்ப் கூறினார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,“வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான ராணுவ தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது,”என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், வெனிசுலாவை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும் டிரம்ப் அறிவித்தது, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கையை கண்டித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த வரிசையில், வெனிசுலாவில் நடைபெறும் சமீபத்திய சம்பவங்கள் கவலையளிப்பதாக இந்திய அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை அந்நாட்டுக்குள் புகுந்து பிடித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (சிபிஎம்) இன்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்த தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிபிஎம் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன், ஜி. செல்வா, எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க தூதரகம் முன்பு திடீரென நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.