தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தற்போது ஒரு மிகச்சிறந்த அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் விஜய்யை ஒரு வெறும் நடிகராக பார்க்கவில்லை என்றும், ஒரு நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவராகவே அவரை நோக்கி அணிதிரள்வதாகவும் குறிப்பிட்டார்.
சமீபகாலமாகத் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் தொகுதிகள் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பாக சலசலப்புகள் நிலவி வருகின்றன. இந்த சூழலில், விஜய்யின் அரசியல் வருகையை பாராட்டியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சி தனது எதிர்கால நலனை கருதி ஆட்சியில் பங்கு கேட்பது நியாயமானது என்றும், கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் அதிகார பகிர்வு குறித்து பேசி வரும் நிலையில், விஜய்யின் வளர்ச்சியை புகழ்ந்துள்ள இந்த கருத்து தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran