‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “இந்த உலகமே போற்றும் உண்மையான ஜனநாயகன் பிரதமர் மோடிதான்” எனத் தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியம் (CBFC) என்பது சட்ட ரீதியாகத் தன்னாட்சியுடன் செயல்படும் அமைப்பு என்றும், அதன் நடைமுறைகளுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை (Emergency) காலத்தை நினைவுபடுத்திய அவர், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்த காங்கிரஸார் இன்று ஜனநாயகம் பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” எனச் சாடியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையினருக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைப்பதில் நடக்கும் அரசியலும் உலகிற்கே தெரியும் என திமுகவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.
தணிக்கை நடைமுறைகள் முடிந்து ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதை நாங்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள அவர், தேவையில்லாமல் பிரதமரைக் குறை சொல்லி மக்களைத் திசைதிருப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.