திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி கிராமத்தில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென அவரிடம் வந்து, “எங்க ஊருக்கு நீங்க என்ன செஞ்சீங்க?” என்று சத்தம் போட்டுச் சண்டையிட்டார். அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் அவரைத் தடுக்க முயன்றபோது, “என்னை அடிங்க பார்க்கலாம்” என்று சொல்லி அந்த வாலிபர் பெரிய ரகளையே செய்தார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை அங்கிருந்து விலகிப் போகச் சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் அந்த வாலிபர் செய்த காரியத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சண்டையிட்டுக் கொண்டிருந்த அவர், திடீரென தெருவில் ஓடிய ஒரு நாயைப் பிடித்து ஆசையாகக் கொஞ்சத் தொடங்கினார். அப்போதுதான் அவர் நல்ல போதையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்தது. அதன் பிறகு பேசிய ஜோதிமணி எம்.பி., “மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி, ஏழைகளுக்குத் தரும் பணத்தையும் குறைத்துவிட்டது; மகாத்மா காந்தியின் பெயர் இருப்பதாலேயே இந்தத் திட்டத்தை அவர்கள் முடக்கப் பார்க்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.